Ads 468x150px

Labels

Wednesday, December 28, 2011

சங்கம் என்ன செய்யும்?


சங்கம்  என்ன செய்யும்? 
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு வரும் வழக்குகளுள்  நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம்  கணவன்-மனைவி  சம்மந்தமான வழக்குகளாகவே வருகின்றன.  அவற்றுள்ளும் பல, ‘தலாக்’ அல்லது ‘ஃபசஹ்’ கேட்டுக் கணவனோ மனைவியோ தொடுக்கும் வழக்குகளாகவே இருக்கின்றன.  பெண் வீட்டாரின் தகுதிக்கு மேலான சீதனம் கேட்டு வரும் வழக்குகளும் இதில் அடங்கும்.  மாமியார், மாமனார், நாத்தனார், மற்றுமுள்ள உறவினர்கள் செய்யும் கொடுமைகளுக்கும் அளவில்லாத வகையில் வழக்குகள் வருகின்றன. 
இவற்றை இயலுமான வரையில் ஒற்றுமைப் படுத்துவதற்கே சங்க நிர்வாகம் பாடுபடுகின்றது.  அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாதபோது, ‘தலாக்’ அல்லது ‘ஃபசஹ்’ முறைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. 
அண்மையில் சங்கத்தின் முன் வந்த வழக்கு, சரியான மார்க்கத் தீர்ப்பின் அவசியத்தைத்  திரும்பிப் பார்க்க  வைத்துள்ளது.  நமதூரைச் சேர்ந்த, ஏற்கனவே ‘தலாக்’ பெற்ற விதவைப் பெண் ஒருவருக்குத் தஞ்சாவூரைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகித் ‘தலாக்’ பெற்ற மாப்பிள்ளையை ஆறு மாதங்களுக்கு முன் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் திருமணம் நடந்தது.  இப்போது, மாப்பிள்ளை, மாமனார் கொடுமை என்ற காரணத்தால், அப்பெண்ணும் அவரைச் சேர்ந்தவர்களும் சங்கத்துக்கு வராமல்,கம்யூனிஸ்ட் மாதர் அமைப்பைச் சேர்ந்த ஒருத்தியின் மூலம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மாப்பிள்ளை வீட்டாரிடம் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி, பத்து லட்சம் ரூபாய் தந்தால்தான் கேசை வாபஸ் வாங்குவோம்; இல்லாவிட்டால், வரதட்சணைக் கொடுமை என்ற காரணம் காட்டி ‘உள்ளே’ தள்ளிவிடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள். 
கட்டப்  பஞ்சாயத்து செய்து மிரட்டி மாப்பிள்ளையிடம் பணம் பிடுங்க நினைத்த கம்யூனிஸ்ட் மகளிர் அணித் தலைவி, மாப்பிள்ளை சார்பாக இருந்து செயல் பட்ட நமதூர்க்காரர் ஒருவருடன் போனில் தொடர்பு கொண்டு, இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் கீழ்த் தரமாகப் பேசியுள்ளார்.  இவ்வளவும் நடந்ததால், மாப்பிள்ளை வீட்டார் தாம் பணிந்து போவதில்லை என்று உறுதியாக நின்றுள்ளனர்.   
அதனை  அடுத்து, யாரென்று காட்டிக்கொள்ளாத  ஒருவர் மாப்பிள்ளை வீட்டாரைத் தொடர்பு  கொண்டு, ‘ஐந்து  லட்சத்துக்கு சம்மதித்தால் கேசை வாபஸ் வாங்கிவிடலாம்’ என்று பேரம்  பேசியுள்ளனர்.  அதற்கும் மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை.

இந்த  நிலையில்தான், தஞ்சாவூர் மாப்பிள்ளை வீட்டார் சங்கத்துக்கு மனு எழுதிக்கொண்டு வந்தார்கள்.  மனுவைப் பரிசீலித்தபோது, அதுவரை பெண் வீட்டார் சங்கத்துக்குத் தமது சார்பிலான எந்த விண்ணப்பமும் கொண்டுவராமல் இருப்பதால், மாப்பிள்ளை வீட்டாரைத் தாமதிக்கக் கேட்டுக்கொண்டோம். 
இதற்கிடையில், காவல் நிலையத்தில் வைத்து, மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒரு லட்சம் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று பேசி ஒப்பந்தம் எழுதி முடித்துப் பணமும் கை மாறிவிட்டதாம்.  மாப்பிள்ளை வீட்டார் ‘தலாக்’ சொல்வதில் முடிவாக நின்றதால், அதனை நேரில் உறுதிப் படுத்துவதற்காக, அவர்களை சங்கத்தின் ஆலிம் அழைத்திருந்தார்.  மாப்பிள்ளை ‘முத்தலாக்’ என்று கூறியதால், ‘ஷரீஅத்’படித் ‘தலாக்’ உண்டாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.  
இதன்  பிறகு பெண்ணும் பெண்ணைச் சேர்ந்தவர்களும்  அந்த மாப்பிள்ளையுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்தனர்!  அதற்குக் காலம் கடந்துவிட்டது.  அது மட்டுமல்லாமல், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் யாருக்கும் தெரியாமல், பெண்கள் தன்னிச்சையாக எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்!  பெண் வீட்டுத் தரப்பில் பல முரண்பாடுகள் நடந்துள்ளதால், இந்தப் பெண்ணும் மாப்பிள்ளையும் இனிச் சேர்ந்து வாழ சாத்தியமே இல்லை என்று சங்கம் முடிவு செய்தது. 
தீர்ப்பளிக்க  சங்கம் என்ற ஒன்று  இருக்கும்போது, வேறு பிற அடாவடித் தனத்தில் இறங்க  நினைப்பவர்களுக்கு  இது ஒரு பாடமாகும்.  ‘சங்கம் என்ன செய்யும்?’ என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுவிடுபவர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது

Monday, September 26, 2011

சங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்


நேற்று மாலை, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அழைப்பை ஏற்று, அதிரையில் இயங்கும் கீழ்க்காணும் சங்கங்கள் மஃரிப் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளியில் ஒன்று கூடின. 

* தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு
* கீழத்தெரு சங்கம்
* தரகர் தெரு சங்கம்
* நெசவுத் தெரு சங்கம்
* கடல்கரைத் தெரு சங்கம்
* மிஸ்கீன் பள்ளி சங்கம் 

தொடக்கமாக, கூட்டத்தின் நோக்கம் பற்றிய பேரா. அப்துல் காதர் அவர்களின் சிற்றுரைக்குப் பின், அப்துல் லத்தீஃப் ஆலிம் சாஹிப் அவர்கள், நமக்கிடையே வரவேண்டிய ஒற்றுமை பற்றி அழகிய சிற்றுரையொன்றை நிகழ்த்தினார்கள்.

அதில் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற பொருளை எடுத்து விரிவாகப் பேசினார்கள்.  நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பட்ட படை ஒன்றுக்குப் பதினெட்டு வயது வாலிபராக இருந்த உசாமா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக்கி, அதில் உமர் (ரலி) போன்ற பெரும் பெரும் நபித் தோழர்களைப் படையணிப் போராளிகளாக்கி அனுப்பியது பற்றிக் குறிப்பிட்டு, தலைமைக்குக் கட்டுப்பட்டு எவ்வாறு அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள்.

இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பின் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடந்தது. அதன் பின் மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. வந்திருந்த சங்கப் பிரதிநிதிகள் தத்தம் கருத்துகளை எடுத்து வைத்தனர்.

பேரூராட்சித் தலைவர் தேர்தலுக்குக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்க முடியாது என்ற கருத்தை கீழத் தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாக்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் போட்டியில் இருப்பதால், முதலில் அவர்களைத்தான் சரி பண்ண வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.

கட்சிப் போட்டியாளர்களையும் கூட்ட முடியும் என்ற கருத்தை தரகர் தெருப் பிரதிநிதி எடுத்து வைத்து, இது உள்ளாட்சித் தேர்தல்தான் என்பதை வலுவாகப் பதிவு செய்தார்.

தலைவர் தேர்தல் கட்சி அடிப்படையில்தான் நடக்கும்; அதை நம்மால் தடுக்க முடியாது என்ற கருத்தைக் கடல்கரைத் தெருப் பிரதிநிதி உறுதியாக எடுத்து வைத்தார்.

போட்டியாளர்களைக் குறைக்க, நமது சங்கங்கள் அவர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் தனது வேண்டுகோளாக எடுத்து வைத்தார்.

முடிவாக, "அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்" என்ற பெயரில் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு, அனைவராலும் அது ஒருமனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில், இன்று காலை பத்து மணிக்கு, மரைக்கா பள்ளிக்கு வருமாறு தலைவர் வேட்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களுக்கு, நமக்கிடையே நிலவும் அதிகமான போட்டியைக் குறைக்கும் விதத்தில் அறிவுரை கூறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்: அதிரை அஹ்மது

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அறிவிப்பு


அதிரை நகரின் சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டுப்பாட்டு முஹல்லாக்களைச் சேர்ந்த ஆறு வாக்களிப்புப் பகுதி (வார்டு)களின் வேட்பாளர்களை ஒருமனதாகத் தேர்வு செய்யும் ஒற்றுமை முயற்சிக்காக இன்று (25-09-2011) காலை பத்து மணி முதல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பயனாக    வெற்றி கிட்டியுள்ளது.  அல்ஹம்து லில்லாஹ்!  அதிரைத் தேர்வு நிலைப் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்கத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
1வது வார்டு   - ஷேக் அஷ்ரப்
12வது வார்டு  - எம்.ஏ. முஹம்மது ஹனீபா
13வது வார்டு  - எம்.ஜே. சம்சுதீன்
14வது வார்டு - எம்.ஏ. ஷேக் அப்துல்லாஹ்
19வது வார்டு  - எஸ். சவ்தா
21வது வார்டு  - எஸ். முஹம்மது இப்ராஹீம்
      நமது சங்கத்தின் நேரிய ஒற்றுமைக்கான வழிகாட்டலுக்கு, புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்கள் அனைவருக்கும் சங்கம் தன் ஆழிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
சம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம் 

Saturday, September 17, 2011

அதிரை பேரூராட்சி தேர்தல் 2011 : வார்டு உறுப்பினர்கள் சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு!


சென்ற 9.09.2011 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் பஞ்சாயத்துத் தேர்தல் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விருப்பமனுக்களை 17.9.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் ஓப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் , தேர்தல் விண்ணப்பப் பெற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்து 20.9.2011தேதிக்குள் மீண்டும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் விண்ணப்பங்களை ஒட்டிய கடித உறையில் வைத்துக்கொடுத்துவிட்டால் அந்த விண்ணப்பங்கள் அவர் சார்ந்துள்ள முஹல்லா பள்ளியில் ஒப்படைக்கப்படும் .

பின்னர் முஹல்லா பள்ளி கமிட்டியில் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய சிலரை தேர்வு செய்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அனுப்பிவைப்பார்கள். இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஊர்மக்கள் அனனவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



இப்படிக்கு
தலைவர்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம்


Sunday, June 12, 2011

நமது சங்கத்தின் அவசியமான அறிவிப்பு!

சென்ற 29/05/2011 அன்றையப் பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின்  உறுப்பினர்கள் சிலரால் ஒரு நல்ல பரிந்துரை முன்மொழியப்பட்டது.  அதன்படி, சென்ற 07/ 06 / 2011 அன்று சங்கக் கட்டிடத்தில் ஒரு சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  அதில், நமதூரில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் வார விடுமுறையான வெள்ளிக்கிழமைகளில் நடைபெறாமல் செய்யவேண்டும் என்ற தீர்மானம் எடுப்பதற்காகக் கான்ட்ராக்டர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுத்து, அவர்களிடம் கருத்துரைகள் பெறப்பட்டன.   


ஏறத்தாழ எல்லாக் கான்ட்ராக்டர்களும் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், அனைவருமே ஒரு மனதாக இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்டனர்.  அதனையடுத்து, அங்கு வர வாய்ப்பிழந்த கான்ட்ராக்டர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்வதற்காக, சங்கம் ஒரு தீர்மானத்தை எழுதி, அதனைப் பொது அறிவிப்பாக எல்லாப் பள்ளிவாசல்களிலும் ஒட்டி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 


இந்த  நல்ல தீர்மானத்தை  வரவேற்ற நமதூரின் இதர சங்கங்களும், தம்மையும் ஏன் இதில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று ஆர்வம் மிக்க கருத்தை வெளியிட்டதன் பேரில், இன்று (11/06/2011)ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாகக் கீழ்க்காணும் நமதூர் சங்கங்களுக்கும் உரிய முறையில் வேண்டுகோள் விடுத்து ஆதரவைப் பெறப்பட்டுள்ளது: 
  • தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு
  • அல்மத்ரசத்து நூருல் முஹம்மதியா சங்கம், கீழத்தெரு,
  • மிஸ்கீன் சாஹிப் பள்ளிக் கமிட்டி, புதுத்தெரு,
  • கடற்கரைத்தெரு முன்னேற்ற சங்கம்,
  • முகைதீன் பள்ளிக் கமிட்டி, தரகர் தெரு,
  • எம்.எஸ்.எம். நகர் முஹல்லா,
  • பிலால் நகர ஐக்கிய ஜமாஅத்,
  • மஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாம் சங்கம், நெசவுத்தெரு,
 

விரும்பத் தகாத நிகழ்வுகளும் அசம்பாவிதங்களும் நடப்பதைத் தவிர்ப்பதற்காக, நம் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, ஊரின் எல்லா மஹல்லா ஜமாஅத்துகளுக்கும் கட்டுப்பட்ட பகுதிகளில் கட்டிடப் பணிகளுக்கு வெள்ளிக் கிழமையை வார விடுமுறையாக்கி ஒத்துழைப்புத் தருமாறு அனைவரையும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் கேட்டுக்கொள்கிறது. 

"நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்; பிரிந்துவிடாதீர்கள்" எனும் அருள்மறை (4:103) குர்ஆனின் பொன்மொழியுடன் இந்த அறிவிப்பு நிறைவு பெற்றது.  

Monday, May 30, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கம்:கட்டிட திறப்பும் பொதுக்குக் கூட்டமும் !


இதற்கு முந்திய பதிவில் அறிவித்தது போல் நேற்று (29/05/2011) நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அத்துடன் புதிய கட்டிட திறப்பும் சிறப்புடன் நடந்தேறியது!
இந்நிகழ்வில் நமது சங்க முக்கிய பிரமுகர்களும் முஹல்லாவாசிகளும் பெரும் அளவில் கலந்துக்கொண்டனர்!! 


ஷம்சுல் இஸ்லாம் சங்கம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம்




   அதிரையின் 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பொதுக்குழு பற்றிய அறிவிப்புச் செய்த பின்னர் வெகுவாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நேன்றைய தினம்(30 / 05 / 2011) பொதுக்குழுக் கூட்டம், சங்கத்தின் புதிய கட்டிடத்தில் ஜனாப் இக்பால் ஹாஜியாரின் தலைமையில், சங்கத் தலைவர், அட்வகேட் அப்துர்ரஜாக் ஹாஜியார், எம்.எஸ். தாஜுத்தீன் ஹாஜியார், சங்கச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகிக்க, நேற்று காலை பத்து மணியளவில் கூடியது.

சங்க நிர்வாகிகளின் அன்பான வரவேற்புடன், பொதுக்குழு வருகையாளர்கள் ஆவலுடன் கூட்ட நிகழ்வுகளுக்காகக் காத்திருந்தனர்.  முன்னதாக, காரீ அப்துல் ஹாதி பாகவியவர்களின் திருமறை குர்ஆன் ஓதலுடன் கூட்டம் முறையாகத் தொடங்கிற்று.  அதனைத் தொடர்ந்து, 2010 – 2011 நிதியாண்டின் வரவு செலவுக் கணக்கு, சங்கப் பொருளாளரால் வாசிக்கப்பட்டது.




அதனைத் தொடர்ந்து, சங்கத் துணைச் செயலாளர், சங்கப் புதிய நிர்வாகத்தின் கடந்த காலச் செயல்பாடுகள் பற்றிய தொகுப்புரையை வழங்கினார். 


அஹ்மது இப்ராஹீம் ஆலிமவர்களின் துஆ



அடுத்த நிகழ்வாக, சங்கத்தின் சட்ட வரைவுகளின்  திருத்தங்கள், பரிந்துரைகள் பற்றிய அறிமுக உரையை, அக்குழுவின் தலைவர் மவ்லவி அஹ்மது இப்ராஹீம்   காஷிஃபி அவர்கள் நிகழ்த்தினார்கள்.


அதனையடுத்து, பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் சங்கப் புதிய கட்டிடத்தைப் பூர்த்தி செய்வதற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் நன்கொடைப் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்திச் சிற்றுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துரைகளுக்கான வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் தம் கருத்துகளை மைக் மூலம் தெரிவிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது.  கருத்துரைகள்  கண்டனமாக இருந்தாலும், வரவேற்பாக இருந்தாலும்  திறந்த மனத்துடன் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டன.  அவை வருமாறு:
       
  • முன்னதாக ஒருவர், சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் தேர்வு முறையாக நடக்கவில்லை என்றும், அது பொதுக்குழுவால் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.  அதனை வரவேற்ற நிர்வாகிகள், அவருடைய ஆட்சேபனையை இந்தப் பொதுக்குழுவில் முன்வைத்து, அதற்கு ஒப்புதல் பெற்றனர்.
  • அடுத்து ஒருவரின் ஆட்சேபனை.  சங்க நிர்வாகிகள் வாரத்தில் ஆறு நாட்கள் கூடி, தலாக் போன்ற பிரச்சினைகளில் ஆண்களை மட்டும் விசாரணை செய்கின்றனர்.  ஆனால், பெண்களின் கருத்தாடல் அங்கே புறக்கணிக்கப் படுகின்றது.  அதனால் இந்தத் தீர்வுகள் ஒரு பக்கச் சார்புடையவை; பெண்களையும் பெண்களைக் கொண்டே விசாரணை செய்து, அவற்றின் விவரங்களைப் பெற்றுத் தீர்ப்புச் செய்வதே நல்லது என்பதை முன்வைத்தார்.  இந்தப் பரிந்துரை பலரால் வரவேற்கப்பட்டது; எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டியது என நிர்வாகிகளால் உறுதியளிக்கப்பட்டது.
  • பேரசிரியர் தனது உரையின்போது, நமதூர் மக்கள் உள்ளூரில் இருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு, 'ஷிஃபா மருத்தவமனை, காதிர்முகைதீன் கல்வி நிலையங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார்.  இது பற்றிய கருத்துரையில், ஒருவர் தனது ஆட்சேபனையைப் பதிவு செய்தார்.  தன் மகளை நிறைமாதக் கர்ப்பிணியாக ஷிஃபாவில் சேர்த்தபோது, அங்கிருந்த மகப்பேறு மருத்துவர் நடந்து கொண்ட விதத்தைக் கடுமையாக விமரிசித்தார்.
  • சங்கத்தின் அறிவிக்கை ஒன்றில், சங்கக் கட்டிட நிதி வசூலாக ஒவ்வொரு வீட்டினரும் கட்டாயம் இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர், அந்த இருநூறு ரூபாய் என்பது மிகவும் குறைந்தது; அதனால், அந்தத் தொகையைக் கூட்டி அறிவிக்க வேண்டும் என்பதைத் தமது சொந்தக் கருத்தாக எடுத்து வைத்தார்.  பலர் அதற்கு மாற்றமான கருத்துகளை வெளியிட்டனர்.  முடிவில், தொகை குறிப்பிடாமல், கூடுதலோ குறைவானதோ, எதுவாயினும் அவர்கள் நன்கொடையாகத் தருவதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகக் கோரினர்.  அதையே பொதுக்குழுவும் ஏற்றுப் பரிந்துரைத்தது.
  • விரைவில் நடக்கவிருக்கும் பேரூராட்சித் தேர்தலில் நமது பகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சங்கத்தின் அனுமதியையும் ஆதரவையும் பெற்று எதிர்ப்பின்றித் தேர்வு பெறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு நம் சங்கம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற பரிந்துரை ஒருவரால் வைக்கப்பட்டு, அது ஒருமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • ஊரின் கட்டிடப் பணிகளுக்கு வெள்ளிக் கிழமைகளில் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதை, அதற்கான காரணங்களுடன் விரிவாக விளக்கி ஒருவர் பேசி, அதற்காக சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சம்மந்தப்பட்டவர்களிடம் அதனை அமுல் படுத்துமாறு கோரவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.   அமர்வில் கலந்துகொண்ட அனைவரும் இதனை வரவேற்றனர்.
  • சங்கத்தின் திருமணப் பதிவேட்டிற்கு மாற்றமாகச் சிலர் தனித்தனிப் பதிவேடுகள் வைத்திருப்பது பற்றியும், அப்படி வைத்திருப்பவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்னொருவர் கருத்தறிவித்தார்.  "அப்படிச் செயல்படுவோர் உங்கள் உறவினர்களாக இருந்தால், அவர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பீர்களா?" என்ற கேள்வி சங்க நிர்வாகிகளால் எழுப்பப்பட்டபோது, "நிச்சயமாகப் புறக்கணிப்போம்" என்று பலர் குரலெழுப்பினர்

இவை போன்ற இன்னும் பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன.  கூட்டம் நிறைவடையும் தருவாயில், சங்கக் கட்டிடப் பணிக்காக யார் யார் எவ்வளவு தர முடியும் என்ற கணக்கெடுப்பு நடந்தது. 

இந்தப் பொதுக்குழுக் கூட்டம் எழுச்சியும் ஆர்வமும் பொங்க உறுப்பினர்களுள் பெரும்பாலோர் கலந்துகொண்டு, ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கி, சங்க நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துவிட்டது குறிப்பிடத் தக்கதாகும்.


நிறைவாக, அஹ்மது இப்ராஹீம் ஆலிமவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே முடிந்தது

செய்தி: அதிரை அஹ்மத்
புகைப்படம்:முஹ்மத்

Saturday, May 14, 2011

பொதுக்குழுக் கூட்டம்: ஒரு மாற்றம்!

இதற்கு முந்திய பதிவில் அறிவித்ததற்கு மாற்றமாக, எதிர்வரும் பதினாறாம் தேதியன்று நடைபெற இருந்த பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ், இம்மாதம் இருபத்தொன்பதாம் தேதியன்று காலை பத்து மணியளவில் செக்கடிப் பள்ளியில் நடைபெறும் என்றும், இம்மாதம் பதினாறாம் தேதி மாலை நான்கு மணியளவில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் சங்கத்தின் தலைவரும் பொதுச் செயலாளரும் அறிவிக்கிறார்கள்.

Thursday, April 28, 2011

பொதுக்குழுக் கூட்டம் - 16-05-2011

பொதுக்குழுக் கூட்டம் - 16-05-2011

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 16-05-2011 திங்கள் கிழமையன்று காலை பத்து மணிக்கு நமது சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொதுக்குழுக் கூடம் நடைபெறும்.  அவ்வமயம் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை உறுப்பினர்களாக இணையாதிருக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மஹல்லாக்களின் இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் உறுப்பினர்களாகச் சேர்ந்துகொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.   கீழ்க்காணும் மஹல்லாக்கள் சங்கத்திற்கு உட்பட்டவையாகும்:

* நடுத்தெரு (மேல்புறம் & கீழ்புறம்)

* வாய்க்கால் தெரு (மேட்டுத்தெரு உள்பட)

* புதுமனைத் தெரு (செக்கடித் தெரு உள்பட)

* ஆலடித் தெரு

* தட்டாரத் தெரு / செட்டித்தெரு / தச்சத்தெரு

* ஆஸ்பத்திரித் தெரு / ஷாதுலியாத் தெரு

* புதுத்தெரு (வடபுறம்)

* கிட்டங்கித் தெரு / மகுதூம் பள்ளித் தெரு / வண்டிப்பேட்டை

* பழஞ்செட்டித் தெரு / எ.ஜே. நகர்

* பிள்ளையார் தெரு / சால்ட் லைன்

* சுரைக்கா கொள்ளை / சங்கத்துக் கொள்ளை

* சி.எம்.பி. லைன் / இஜாபா பள்ளித் தெரு

* எஸ்.எ.எம். நகர்

* பிலால் நகர்

முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருப்பதால், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு கோரப்படுகின்றார்கள்.

அன்புடன் அழைக்கும்:   தலைவர் & செயலாளர்

Thursday, March 17, 2011

லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்!

லண்டன்  வட்ட மேஜை மாநாட்டில்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்! 

அதிரை அஹ்மது

 

நமது ஷம்சுல்  இஸ்லாம் சங்கம் எத்தகைய  பாரம்பரியமானது என்பதற்குக்  கீழ்க் காணும் தகவல் ஓர்  எடுத்துக்காட்டாகும்:

நமது சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது.  நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில்  ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய  நிர்வாகிகளாக இருந்தவர்கள்:


தலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)
செயலாளர்: அ.மு.க. அபுல் பரகாத் (புலவர் பஷீர் அவர்களின் தந்தை)
பொருளாளர்: சேகனா வீட்டு அப்துல் லத்தீப் ஹாஜியார்

இளைஞரும்  ஆர்வமுள்ள காந்தியவாதியுமாக இருந்த செயலாளருக்கு ஒரு  சிந்தனை முகிழ்த்தது.  'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றி, லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூடுகிறார்களாம்.  அதற்கு அதிரையின் பங்கு வேண்டாமா?'


அன்று ஆங்கில அறிவைப் பெற்றிருந்த சங்கச் செயலாளர், சங்கத்தின் சார்பாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குக் கட்டாயம் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதினார்கள்.  அதன் கீழே மூவரும் கையொப்பமிட்டு, லண்டனில் நடந்துகொண்டிருந்த வட்ட மேஜை மாநாட்டிற்குத் தந்தி மூலம் அனுப்பிவைத்துள்ளார்கள். 


இந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து  வந்த அந்தத் தீர்மானம், நம்  தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது. 


இந்தியச்  சுதந்திரத்தில் நம் அதிரைக்கும்  பங்குண்டு என்பதை உணர்த்தும் இந்த வரலாற்று நிகழ்வை, அண்மையில்  நமதூர் எ.எல்.எம். பள்ளி ஆண்டுவிழாவின்போது, அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'அதிரை அறிஞர்', தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்கள் வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.

Tuesday, February 8, 2011

செயற்குழுக் கூட்டம்

"Better late than never" என்பதற்கொப்ப, சென்ற டிசம்பர் இறுதியில் நடைபெற்ற நமது சங்கத்தின் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்களைப் பதிவு செய்வதில் நிறைவடைகின்றோம். 

  • புதிதாக உருவாகி வரும் ஷம்சுல்  இஸ்லாம் சங்கத்தின் கட்டடப்  பணியை விரைவு படுத்தி நிறைவு செய்வதற்காக, நல்லுள்ளம் கொண்ட நமதூர்ச் சகோதரர்களிடம் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நிதி வசூல் செய்வது பற்றிய அறிவிப்பை இன்டர்நெட்டில் வெளியிடுவது.
 
  • முன்பு  முறையாகக் கொடுக்கப்பட்ட  சங்கத்தின் திருமணச் சான்றிதழைத்  தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரை பரிசீலிக்கப்பட்டது.  அதன்படி, அதில் பங்கெடுத்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  அத்துடன், நமதூரில் நடக்கும் திருமணங்களுக்கு நம்மிடம் ஒப்புதல் பெறாமல் சான்றிதழ் வழங்கக் கூடாது என்று அரசு காஜி அவர்களுக்கும் மனு அனுப்பப்பட்டது.
     
  • சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாப் எஸ்.ஏ.எம். ஜமாலுத்தீன் அவர்கள் இறந்ததையொட்டி, தற்போதையப் பொருளாளராக எம்.பி. அஹமது (அதிரை அஹமது) நியமனம் பெற்றார். அத்துடன், சங்கத்தின் அவ்வப்போதைய செயல்பாடுகளையும் முன்னேற்றத்தையும் உலகறியச் செய்யும் விதத்தில், வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்து வெளியிடும் பொறுப்பையும் அதிரை அஹமது அவர்கள் ஏற்று நடத்துவார்.
 
  • சங்கத்தின்  புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்ற 1-4-2010 முதல் 30-11-2010 வரையுள்ள வரவு-செலவுக் கணக்கு, சங்கச் செயலாளரால் வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
  • ECR நெடுஞ்சாலையில் இருக்கும் வயலை (சங்கத்திற்குச் சொந்தமானது) விற்பனை செய்வதற்கான முடிவெடுக்கப்பட்டு, தரகர்கள் மூலம் அதனை விற்பனை செய்ய ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 
  • சங்கத்தின்  சட்ட திட்டங்கள் (பைலா), சில திருத்தங்களும் மாற்றங்களும் இணைப்புகளும் செய்யப்பட வேண்டியிருப்பதால், அப்பொறுப்பை, வக்கீல் அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமும், மார்க்க ஆலோசனைக் குழுத் தலைவர் மவ்லானா முஹம்மது இப்ராஹீம் அவர்களிடமும் ஒப்படைத்து, அப்பணியைத் துரிதப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
    • சங்கத்தின் ஆதரவில் நடைபெறும் திருமணங்களின் பதிவேட்டில் இதுவரை இடம்பெறாமல் இருந்த சங்க நிர்வாகிகளின் சாட்சிக் கையொப்பங்கள் இணைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.  

    Sunday, February 6, 2011

    சங்கம் திறம்படச் செயல்பட...

    சங்கம்  திறம்படச் செயல்பட... 

          'முன்னேற்றப்  பாதையில் ஷம்சுல் இஸ்லாம்  சங்கம்' என்ற தலைப்பில்  நமது வலைத் தளத்தில்  ஓர் இடுகை இட்டு, அதற்குச்  சான்றாக, புதிதாக உருவாகிவரும்  சங்கக் கட்டுமானப் பணியின் நிழற்படங்களையும் இணைத்திருந்தோம்.

           
                           கடந்த காலத்தில் ஓரிருவரின் தன்னிச்சைப் போக்கால் சங்கத்துக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவது, தற்போதைய சங்க நிர்வாகிகளின் அன்றாடச் செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கும் நிலையில், சங்கம் நிதானமாக, முறையாக (slowly but steadily) இயங்கி வருகின்றது.

           
                         சங்கத்தின்  பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடப் பணி நடந்துவரும் இக்கால கட்டத்தில், தற்காலிகமாக அருகில் உள்ள செக்கடிப் பள்ளியில் சங்கத்தின் அன்றாட அமர்வுகள் நடந்துவருவதில் பல வசதிக் குறைவுகள் இருப்பதை நாம் உணர்கின்றோம்.  உதாரணமாக, ஒரு சாரார் தமது தரப்பு வாதத்தை எடுத்துரைக்கும்போது, சங்க நிர்வாகிகளைத் தவிர மற்றவர்களும் அங்கு வந்து அமர்ந்துகொள்வதால், அவர்கள் தமது தகவல்களைக் கூறத் தயங்குகின்றனர். 

          மேலும், சங்கத்தின் ஆவணங்களைப் பத்திரப்படுத்தி  வைப்பதும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றது.  பள்ளிவாசலில் பலரும் வந்து போகும் நிலையிருப்பதால், அவற்றைப் பாதுகாப்பது சிரமமாக இருக்கிறது.  பொது மக்கள் புதிய நிர்வாகத்தினரைச் சந்தித்துத் தம் கோரிக்கைகளை ஒப்படைப்பதற்காக, தலைவர் அல்லது செயலாளரின் வீடுகளுக்கு வரவேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர்.

          இந்நிலையில், சங்கக் கட்டடப் பணியோ, ஆமை வேகத்தில் நடந்து வருகின்றது!  காரணம்:  காசில்லை!  ஆகவே, சங்க நிர்வாகக் குழுவினர், தாமே முன்னின்று கோரிக்கை வைப்பதைப் போல், இங்கே அணி வகுத்து, உங்கள் முன் காட்சி தருகின்றனர்:


    தலைவர்      து. தலைவர்  செயலாளர்    து. செயலாளர் பொருளாளர் 
    Your browser may not support display of this image.
        

          பொறியாளர் ஹலீம்தீன் அவர்கள் அண்மையில்  சமர்ப்பித்த மதிப்பீட்டு  அறிக்கைப்படி, முழுமையாகக்  கட்டி முடிக்க 37 இலட்சம் ரூபாய் செலவாகும்.  இதுவரை, சங்கத்தின் பொருள் இருப்பிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் மட்டும் கட்டடப் பணியில் செலவிடப்பட்டுள்ளது.  மீதித் தொகையை நல்லுள்ளம் கொண்ட நம்மூர் சகோதரர்கள் மற்றும் கொடையாளர்களின் பொருளுதவி மூலம் செய்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

          ஊர்ப் பொது நலனில் அக்கறையுள்ள  அனைவரும் உங்கள் உங்கள் பங்களிப்பைப் பணமாகவோ பொருளாகவோ வழங்கி உதவுமாறு நிர்வாகத்தினர் அன்போடு கோரிக்கை வைக்கின்றனர்.  உங்கள் தாராளப் பங்களிப்புகள், பொது நலச் சங்கமான ஷம்சுல் இஸ்லாம் சங்கம் திறம்படச் செயல்பட உதவி புரியும்.


          சங்கத்தின்  வங்கிக் கணக்கு விவரம்:
           
                    Shamsul Islam Sangam
          Indian Bank, Adirampattinam Branch
          Current Account No. 921555264

    Saturday, January 1, 2011

    Adirai Chekkady Mosque Recent Photos 01/01/2011- Adirai Ahamed

    Adirai Chekkady Mosque
    ஷம்சுல் இஸ்லாம் சங்கம் கட்டுமான பகுதி

    Adirai Chekkady Mosque

    Adirai Chekkady Mosque
    Adirai Chekkady Mosque

    இறைக் கட்டளை

    இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)