Ads 468x150px

Labels

Monday, November 22, 2010

கல்யாணமாம் கல்யாணம்!

                    "Marriages are made in Heaven" (திருமணங்கள் சொர்க்கத்தில் நடத்தப்படுகின்றன) என்றொரு பழமொழியுண்டு.  சொர்க்கத்தில் நடத்தப்படுகின்றனவோ என்னவோ, அவற்றுள் பெரும்பாலானவை சோகத்தில் முடிகின்றன – முறையாக நடத்தப்படாததால்!

            மோதல்கள், பிரச்சினைகள், வழக்குகள், சமரச முயற்சிகள், இன்னும் சொல்லப் போனால் கட்டப் பஞ்சாயத்துகள், - இப்படி, துயரத் தொடர்கதைகளாகப் பலரின் வாழ்க்கைகள் கேள்விக் குறியாகவே இருப்பதை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் பார்க்கிறோம்; கேட்கிறோம்.

            இது பற்றிய சிந்தனையில் இருந்தபோது, பல திருமண நிகழ்வுகள், அவை நடத்தி வைக்கப்படும் முறைகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன; சிந்திக்கவும் வைக்கின்றன.

            நாகூர்க்  கல்யாணம்: திடீரென்று கேள்விப்படுகிறோம், பையன் இன்னாருக்கும் இன்ன பெண்ணுக்கும் கல்யாணம் முடிந்துவிட்டதாம் என்று!  எப்படி?  எங்கே?  இந்தக் கேள்விகளுக்கு விடை: "நாகூர்க் கல்யாணம்!"  நாகூரில் இருக்கும் 'சாபுமார்கள்' ஒவ்வொருவரும் தன்னிடம் ஒரு கல்யாணப் புத்தகம் வைத்திருக்கிறாராம்.  அவ்வூருக்குப் புதிதாக அல்லது ஊர்க்காரரரின் பரிந்துரையோடு வருவோரைச் சூழ்ந்துகொண்டு, அவர்களின் 'நாட்டங்களை' நிறைவேற்றி வைக்கின்றார்களாம்!  அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட தொகை கை மாறியவுடன், 'அல்பாத்திஹா' சொல்லப்பட்டு, அங்கேயே திருமணச் சான்றிதழ் வழங்கப்படுகின்றதாம்! இதுபற்றி, இன்னும் கதை கதையாகத் தகவல்கள் நாள்தோறும் வருகின்றன. 

            மதுரை பாவா:  மதுரைப் பகுதியில் இப்படி ஒருவர் பிரபலமானவர்.  இவருக்குத் 'தொழிலே' திருமணம் செய்துவைப்பதுதான்.  அதற்காக லட்டர்பேடு, ரப்பர் ஸ்டாம்பு, பதிவுப் புத்தகம், சர்ட்டிபிகேட் சகிதம் ஓர் ஆணையாளர் போல் அமர்ந்து, தன்னை நாடி வரும் ஜோடிகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பாராம்.  சாட்சிகள்?  அதெல்லாம் பேசக் கூடாது!  இருந்தால் சரி; இல்லாவிட்டால், அவர்தான் எல்லாமும்!  இதைத் தட்டிக் கேட்க யாருக்கும் நேரமில்லை; நெஞ்சமில்லை!  அது பாட்டுக்கு அந்தந்த நேரத்தில் நடந்துவிடும்.  என்னிடம் இதுபற்றிக் கூறிய மதுரை நண்பரிடம், "நம் சமுதாய அமைப்புகள் இந்த அநியாயத்தை அடக்கக் கூடாதா?" என்று கேட்டபோது, அவர் கூறிய பதில்:

            "அவருக்குப்  பின்னால் ஒரு கூலிப்  படையே இருக்கு சார்!  அவர்களுக்கெல்லாம் தீனி  போட்டுத்தான் இவருடைய  'சாம்ராஜ்யம்' சரியாக நடந்து வருகிறது!"

            தான்தோன்றிக்  கல்யாணம்:  பெற்றோரும் குடும்பத்தவரும் சேர்ந்து செய்துவைத்தும், 'எப்படியோ' அந்தத் திருமணத்தின் மூலம் குழந்தை பெற்றும், திடீரென்று இன்னொருவனோடு ஓடிப்போய், எங்கோ 'காழி' ஒருவரைத் தேடித் பிடித்து, அவ்விருவரும் 'கல்யாணம்' செய்துகொள்ளும் 'தான்தோன்றிக் கல்யானங்களும்' நடக்கத்தான் செய்கின்றன!  உறவில்   சம்மந்தப்பட்டவர்கள் தேடித் பிடித்துவந்து கேட்டால், "தலாக் சொல்லிவிட்டோம்; மறு நிக்காஹ் செய்துகொண்டோம்" என்று எதிர்வாதம் பேசும் 'தான்தோன்றித் தம்பதிகளை'யும் பார்க்கத்தான் செய்கின்றோம்! சுருக்கமாகச் சொல்லப்போனால், இவர்கள், 'ஓடிப் போனவர்கள்'!  இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியில் என்ன தண்டனை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  ஆனால், உண்மையில் நடப்பதென்ன?  இங்கு 'ஆபத் பாந்தவர்களாக' வந்து சேர்கிறார்கள் 'கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள்' தம் வயிற்றையும் பாக்கெட்டையும் நிரப்புவதற்கு!  இதற்குப் பிறகும், அந்தத் திருமணத்தில் 'வலிமா' விருந்து நடக்கிறது; 'உரோஷமில்லா ஊரார்' பிரியாணி சமைத்துச் சாப்பிடும் கொடுமையும் நடக்கிறது!

            இப்படி  எல்லாம் முறையற்ற 'வாழ்க்கை ஒப்பந்தங்கள்' சமூகத்தில் நடப்பதாலோ என்னவோ, அரசாங்கமும்  தன் பிடியை இறுக்கிப் பிடித்து, 'கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம்' என்ற ஒன்றை நம் மீது தினித்துள்ளதோ என்னவோ!

            முறைகேடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான், பல ஊர்களில் பள்ளிவாயில்களை ஒட்டி, சங்கங்களும் சபைகளும் செயல்படுகின்றன.  அது போன்றுதான், நம்மூரிலும் சில ஜமாஅத்துகள் திருமணப் பதிவேடுகளை வைத்து முறையாகச் செயல்பட்டு வருகின்றன.  தகுதி வாய்ந்த நிர்வாகிகளால் நடத்தப்படும் சங்கங்கள் தரமான சேவைகளைச் செய்யக் காத்திருக்கின்றன.

            இந்த  அடிப்படையில் செயல்படத்  தொடங்கி, நமதூர் ஷம்சுல்  இஸ்லாம் சங்கம் பல பிரச்சினைகளைச் சுமுகமாகவும் அமைதியாகவும் தீர்த்து வைத்துள்ளது.  எனவே, சங்கத்தை வலுப்படுத்துவோம்! சமாதானத்தை நிலைநாட்டுவோம்!

No comments:

Post a Comment

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)