சங்கம் என்ன செய்யும்?
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு வரும் வழக்குகளுள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் கணவன்-மனைவி சம்மந்தமான வழக்குகளாகவே வருகின்றன. அவற்றுள்ளும் பல, ‘தலாக்’ அல்லது ‘ஃபசஹ்’ கேட்டுக் கணவனோ மனைவியோ தொடுக்கும் வழக்குகளாகவே இருக்கின்றன. பெண் வீட்டாரின் தகுதிக்கு மேலான சீதனம் கேட்டு வரும் வழக்குகளும் இதில் அடங்கும். மாமியார், மாமனார், நாத்தனார், மற்றுமுள்ள உறவினர்கள் செய்யும் கொடுமைகளுக்கும் அளவில்லாத வகையில் வழக்குகள் வருகின்றன.
அண்மையில் சங்கத்தின் முன் வந்த வழக்கு, சரியான மார்க்கத் தீர்ப்பின் அவசியத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நமதூரைச் சேர்ந்த, ஏற்கனவே ‘தலாக்’ பெற்ற விதவைப் பெண் ஒருவருக்குத் தஞ்சாவூரைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகித் ‘தலாக்’ பெற்ற மாப்பிள்ளையை ஆறு மாதங்களுக்கு முன் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் திருமணம் நடந்தது. இப்போது, மாப்பிள்ளை, மாமனார் கொடுமை என்ற காரணத்தால், அப்பெண்ணும் அவரைச் சேர்ந்தவர்களும் சங்கத்துக்கு வராமல்,கம்யூனிஸ்ட் மாதர் அமைப்பைச் சேர்ந்த ஒருத்தியின் மூலம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மாப்பிள்ளை வீட்டாரிடம் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி, பத்து லட்சம் ரூபாய் தந்தால்தான் கேசை வாபஸ் வாங்குவோம்; இல்லாவிட்டால், வரதட்சணைக் கொடுமை என்ற காரணம் காட்டி ‘உள்ளே’ தள்ளிவிடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள்.
கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டி மாப்பிள்ளையிடம் பணம் பிடுங்க நினைத்த கம்யூனிஸ்ட் மகளிர் அணித் தலைவி, மாப்பிள்ளை சார்பாக இருந்து செயல் பட்ட நமதூர்க்காரர் ஒருவருடன் போனில் தொடர்பு கொண்டு, இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் கீழ்த் தரமாகப் பேசியுள்ளார். இவ்வளவும் நடந்ததால், மாப்பிள்ளை வீட்டார் தாம் பணிந்து போவதில்லை என்று உறுதியாக நின்றுள்ளனர்.
அதனை அடுத்து, யாரென்று காட்டிக்கொள்ளாத ஒருவர் மாப்பிள்ளை வீட்டாரைத் தொடர்பு கொண்டு, ‘ஐந்து லட்சத்துக்கு சம்மதித்தால் கேசை வாபஸ் வாங்கிவிடலாம்’ என்று பேரம் பேசியுள்ளனர். அதற்கும் மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில்தான், தஞ்சாவூர் மாப்பிள்ளை வீட்டார் சங்கத்துக்கு மனு எழுதிக்கொண்டு வந்தார்கள். மனுவைப் பரிசீலித்தபோது, அதுவரை பெண் வீட்டார் சங்கத்துக்குத் தமது சார்பிலான எந்த விண்ணப்பமும் கொண்டுவராமல் இருப்பதால், மாப்பிள்ளை வீட்டாரைத் தாமதிக்கக் கேட்டுக்கொண்டோம்.
இதற்கிடையில், காவல் நிலையத்தில் வைத்து, மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒரு லட்சம் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று பேசி ஒப்பந்தம் எழுதி முடித்துப் பணமும் கை மாறிவிட்டதாம். மாப்பிள்ளை வீட்டார் ‘தலாக்’ சொல்வதில் முடிவாக நின்றதால், அதனை நேரில் உறுதிப் படுத்துவதற்காக, அவர்களை சங்கத்தின் ஆலிம் அழைத்திருந்தார். மாப்பிள்ளை ‘முத்தலாக்’ என்று கூறியதால், ‘ஷரீஅத்’படித் ‘தலாக்’ உண்டாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் பிறகு பெண்ணும் பெண்ணைச் சேர்ந்தவர்களும் அந்த மாப்பிள்ளையுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்தனர்! அதற்குக் காலம் கடந்துவிட்டது. அது மட்டுமல்லாமல், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் யாருக்கும் தெரியாமல், பெண்கள் தன்னிச்சையாக எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்! பெண் வீட்டுத் தரப்பில் பல முரண்பாடுகள் நடந்துள்ளதால், இந்தப் பெண்ணும் மாப்பிள்ளையும் இனிச் சேர்ந்து வாழ சாத்தியமே இல்லை என்று சங்கம் முடிவு செய்தது.
தீர்ப்பளிக்க சங்கம் என்ற ஒன்று இருக்கும்போது, வேறு பிற அடாவடித் தனத்தில் இறங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகும். ‘சங்கம் என்ன செய்யும்?’ என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுவிடுபவர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது