Ads 468x150px

Labels

Monday, May 30, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கம்:கட்டிட திறப்பும் பொதுக்குக் கூட்டமும் !


இதற்கு முந்திய பதிவில் அறிவித்தது போல் நேற்று (29/05/2011) நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அத்துடன் புதிய கட்டிட திறப்பும் சிறப்புடன் நடந்தேறியது!
இந்நிகழ்வில் நமது சங்க முக்கிய பிரமுகர்களும் முஹல்லாவாசிகளும் பெரும் அளவில் கலந்துக்கொண்டனர்!! 


ஷம்சுல் இஸ்லாம் சங்கம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம்




   அதிரையின் 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பொதுக்குழு பற்றிய அறிவிப்புச் செய்த பின்னர் வெகுவாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நேன்றைய தினம்(30 / 05 / 2011) பொதுக்குழுக் கூட்டம், சங்கத்தின் புதிய கட்டிடத்தில் ஜனாப் இக்பால் ஹாஜியாரின் தலைமையில், சங்கத் தலைவர், அட்வகேட் அப்துர்ரஜாக் ஹாஜியார், எம்.எஸ். தாஜுத்தீன் ஹாஜியார், சங்கச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகிக்க, நேற்று காலை பத்து மணியளவில் கூடியது.

சங்க நிர்வாகிகளின் அன்பான வரவேற்புடன், பொதுக்குழு வருகையாளர்கள் ஆவலுடன் கூட்ட நிகழ்வுகளுக்காகக் காத்திருந்தனர்.  முன்னதாக, காரீ அப்துல் ஹாதி பாகவியவர்களின் திருமறை குர்ஆன் ஓதலுடன் கூட்டம் முறையாகத் தொடங்கிற்று.  அதனைத் தொடர்ந்து, 2010 – 2011 நிதியாண்டின் வரவு செலவுக் கணக்கு, சங்கப் பொருளாளரால் வாசிக்கப்பட்டது.




அதனைத் தொடர்ந்து, சங்கத் துணைச் செயலாளர், சங்கப் புதிய நிர்வாகத்தின் கடந்த காலச் செயல்பாடுகள் பற்றிய தொகுப்புரையை வழங்கினார். 


அஹ்மது இப்ராஹீம் ஆலிமவர்களின் துஆ



அடுத்த நிகழ்வாக, சங்கத்தின் சட்ட வரைவுகளின்  திருத்தங்கள், பரிந்துரைகள் பற்றிய அறிமுக உரையை, அக்குழுவின் தலைவர் மவ்லவி அஹ்மது இப்ராஹீம்   காஷிஃபி அவர்கள் நிகழ்த்தினார்கள்.


அதனையடுத்து, பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் சங்கப் புதிய கட்டிடத்தைப் பூர்த்தி செய்வதற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் நன்கொடைப் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்திச் சிற்றுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துரைகளுக்கான வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் தம் கருத்துகளை மைக் மூலம் தெரிவிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது.  கருத்துரைகள் – கண்டனமாக இருந்தாலும், வரவேற்பாக இருந்தாலும் – திறந்த மனத்துடன் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டன.  அவை வருமாறு:
       
  • முன்னதாக ஒருவர், சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் தேர்வு முறையாக நடக்கவில்லை என்றும், அது பொதுக்குழுவால் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.  அதனை வரவேற்ற நிர்வாகிகள், அவருடைய ஆட்சேபனையை இந்தப் பொதுக்குழுவில் முன்வைத்து, அதற்கு ஒப்புதல் பெற்றனர்.
  • அடுத்து ஒருவரின் ஆட்சேபனை.  சங்க நிர்வாகிகள் வாரத்தில் ஆறு நாட்கள் கூடி, தலாக் போன்ற பிரச்சினைகளில் ஆண்களை மட்டும் விசாரணை செய்கின்றனர்.  ஆனால், பெண்களின் கருத்தாடல் அங்கே புறக்கணிக்கப் படுகின்றது.  அதனால் இந்தத் தீர்வுகள் ஒரு பக்கச் சார்புடையவை; பெண்களையும் பெண்களைக் கொண்டே விசாரணை செய்து, அவற்றின் விவரங்களைப் பெற்றுத் தீர்ப்புச் செய்வதே நல்லது என்பதை முன்வைத்தார்.  இந்தப் பரிந்துரை பலரால் வரவேற்கப்பட்டது; எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டியது என நிர்வாகிகளால் உறுதியளிக்கப்பட்டது.
  • பேரசிரியர் தனது உரையின்போது, நமதூர் மக்கள் உள்ளூரில் இருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு, 'ஷிஃபா மருத்தவமனை, காதிர்முகைதீன் கல்வி நிலையங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார்.  இது பற்றிய கருத்துரையில், ஒருவர் தனது ஆட்சேபனையைப் பதிவு செய்தார்.  தன் மகளை நிறைமாதக் கர்ப்பிணியாக ஷிஃபாவில் சேர்த்தபோது, அங்கிருந்த மகப்பேறு மருத்துவர் நடந்து கொண்ட விதத்தைக் கடுமையாக விமரிசித்தார்.
  • சங்கத்தின் அறிவிக்கை ஒன்றில், சங்கக் கட்டிட நிதி வசூலாக ஒவ்வொரு வீட்டினரும் கட்டாயம் இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர், அந்த இருநூறு ரூபாய் என்பது மிகவும் குறைந்தது; அதனால், அந்தத் தொகையைக் கூட்டி அறிவிக்க வேண்டும் என்பதைத் தமது சொந்தக் கருத்தாக எடுத்து வைத்தார்.  பலர் அதற்கு மாற்றமான கருத்துகளை வெளியிட்டனர்.  முடிவில், தொகை குறிப்பிடாமல், கூடுதலோ குறைவானதோ, எதுவாயினும் அவர்கள் நன்கொடையாகத் தருவதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகக் கோரினர்.  அதையே பொதுக்குழுவும் ஏற்றுப் பரிந்துரைத்தது.
  • விரைவில் நடக்கவிருக்கும் பேரூராட்சித் தேர்தலில் நமது பகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சங்கத்தின் அனுமதியையும் ஆதரவையும் பெற்று எதிர்ப்பின்றித் தேர்வு பெறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு நம் சங்கம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற பரிந்துரை ஒருவரால் வைக்கப்பட்டு, அது ஒருமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • ஊரின் கட்டிடப் பணிகளுக்கு வெள்ளிக் கிழமைகளில் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதை, அதற்கான காரணங்களுடன் விரிவாக விளக்கி ஒருவர் பேசி, அதற்காக சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சம்மந்தப்பட்டவர்களிடம் அதனை அமுல் படுத்துமாறு கோரவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.   அமர்வில் கலந்துகொண்ட அனைவரும் இதனை வரவேற்றனர்.
  • சங்கத்தின் திருமணப் பதிவேட்டிற்கு மாற்றமாகச் சிலர் தனித்தனிப் பதிவேடுகள் வைத்திருப்பது பற்றியும், அப்படி வைத்திருப்பவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்னொருவர் கருத்தறிவித்தார்.  "அப்படிச் செயல்படுவோர் உங்கள் உறவினர்களாக இருந்தால், அவர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பீர்களா?" என்ற கேள்வி சங்க நிர்வாகிகளால் எழுப்பப்பட்டபோது, "நிச்சயமாகப் புறக்கணிப்போம்" என்று பலர் குரலெழுப்பினர். 

இவை போன்ற இன்னும் பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன.  கூட்டம் நிறைவடையும் தருவாயில், சங்கக் கட்டிடப் பணிக்காக யார் யார் எவ்வளவு தர முடியும் என்ற கணக்கெடுப்பு நடந்தது. 

இந்தப் பொதுக்குழுக் கூட்டம் எழுச்சியும் ஆர்வமும் பொங்க உறுப்பினர்களுள் பெரும்பாலோர் கலந்துகொண்டு, ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கி, சங்க நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துவிட்டது குறிப்பிடத் தக்கதாகும்.


நிறைவாக, அஹ்மது இப்ராஹீம் ஆலிமவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே முடிந்தது

செய்தி: அதிரை அஹ்மத்
புகைப்படம்:முஹ்மத்

Saturday, May 14, 2011

பொதுக்குழுக் கூட்டம்: ஒரு மாற்றம்!

இதற்கு முந்திய பதிவில் அறிவித்ததற்கு மாற்றமாக, எதிர்வரும் பதினாறாம் தேதியன்று நடைபெற இருந்த பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ், இம்மாதம் இருபத்தொன்பதாம் தேதியன்று காலை பத்து மணியளவில் செக்கடிப் பள்ளியில் நடைபெறும் என்றும், இம்மாதம் பதினாறாம் தேதி மாலை நான்கு மணியளவில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் சங்கத்தின் தலைவரும் பொதுச் செயலாளரும் அறிவிக்கிறார்கள்.

Thursday, April 28, 2011

பொதுக்குழுக் கூட்டம் - 16-05-2011

பொதுக்குழுக் கூட்டம் - 16-05-2011

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 16-05-2011 திங்கள் கிழமையன்று காலை பத்து மணிக்கு நமது சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொதுக்குழுக் கூடம் நடைபெறும்.  அவ்வமயம் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை உறுப்பினர்களாக இணையாதிருக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மஹல்லாக்களின் இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் உறுப்பினர்களாகச் சேர்ந்துகொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.   கீழ்க்காணும் மஹல்லாக்கள் சங்கத்திற்கு உட்பட்டவையாகும்:

* நடுத்தெரு (மேல்புறம் & கீழ்புறம்)

* வாய்க்கால் தெரு (மேட்டுத்தெரு உள்பட)

* புதுமனைத் தெரு (செக்கடித் தெரு உள்பட)

* ஆலடித் தெரு

* தட்டாரத் தெரு / செட்டித்தெரு / தச்சத்தெரு

* ஆஸ்பத்திரித் தெரு / ஷாதுலியாத் தெரு

* புதுத்தெரு (வடபுறம்)

* கிட்டங்கித் தெரு / மகுதூம் பள்ளித் தெரு / வண்டிப்பேட்டை

* பழஞ்செட்டித் தெரு / எ.ஜே. நகர்

* பிள்ளையார் தெரு / சால்ட் லைன்

* சுரைக்கா கொள்ளை / சங்கத்துக் கொள்ளை

* சி.எம்.பி. லைன் / இஜாபா பள்ளித் தெரு

* எஸ்.எ.எம். நகர்

* பிலால் நகர்

முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருப்பதால், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு கோரப்படுகின்றார்கள்.

அன்புடன் அழைக்கும்:   தலைவர் & செயலாளர்

Thursday, March 17, 2011

லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்!

லண்டன்  வட்ட மேஜை மாநாட்டில்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்! 

அதிரை அஹ்மது

 

நமது ஷம்சுல்  இஸ்லாம் சங்கம் எத்தகைய  பாரம்பரியமானது என்பதற்குக்  கீழ்க் காணும் தகவல் ஓர்  எடுத்துக்காட்டாகும்:

நமது சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது.  நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில்  ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய  நிர்வாகிகளாக இருந்தவர்கள்:


தலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)
செயலாளர்: அ.மு.க. அபுல் பரகாத் (புலவர் பஷீர் அவர்களின் தந்தை)
பொருளாளர்: சேகனா வீட்டு அப்துல் லத்தீப் ஹாஜியார்

இளைஞரும்  ஆர்வமுள்ள காந்தியவாதியுமாக இருந்த செயலாளருக்கு ஒரு  சிந்தனை முகிழ்த்தது.  'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றி, லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூடுகிறார்களாம்.  அதற்கு அதிரையின் பங்கு வேண்டாமா?'


அன்று ஆங்கில அறிவைப் பெற்றிருந்த சங்கச் செயலாளர், சங்கத்தின் சார்பாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குக் கட்டாயம் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதினார்கள்.  அதன் கீழே மூவரும் கையொப்பமிட்டு, லண்டனில் நடந்துகொண்டிருந்த வட்ட மேஜை மாநாட்டிற்குத் தந்தி மூலம் அனுப்பிவைத்துள்ளார்கள். 


இந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து  வந்த அந்தத் தீர்மானம், நம்  தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது. 


இந்தியச்  சுதந்திரத்தில் நம் அதிரைக்கும்  பங்குண்டு என்பதை உணர்த்தும் இந்த வரலாற்று நிகழ்வை, அண்மையில்  நமதூர் எ.எல்.எம். பள்ளி ஆண்டுவிழாவின்போது, அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'அதிரை அறிஞர்', தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்கள் வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.

Tuesday, February 8, 2011

செயற்குழுக் கூட்டம்

"Better late than never" என்பதற்கொப்ப, சென்ற டிசம்பர் இறுதியில் நடைபெற்ற நமது சங்கத்தின் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்களைப் பதிவு செய்வதில் நிறைவடைகின்றோம். 

  • புதிதாக உருவாகி வரும் ஷம்சுல்  இஸ்லாம் சங்கத்தின் கட்டடப்  பணியை விரைவு படுத்தி நிறைவு செய்வதற்காக, நல்லுள்ளம் கொண்ட நமதூர்ச் சகோதரர்களிடம் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நிதி வசூல் செய்வது பற்றிய அறிவிப்பை இன்டர்நெட்டில் வெளியிடுவது.
 
  • முன்பு  முறையாகக் கொடுக்கப்பட்ட  சங்கத்தின் திருமணச் சான்றிதழைத்  தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரை பரிசீலிக்கப்பட்டது.  அதன்படி, அதில் பங்கெடுத்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  அத்துடன், நமதூரில் நடக்கும் திருமணங்களுக்கு நம்மிடம் ஒப்புதல் பெறாமல் சான்றிதழ் வழங்கக் கூடாது என்று அரசு காஜி அவர்களுக்கும் மனு அனுப்பப்பட்டது.
     
  • சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாப் எஸ்.ஏ.எம். ஜமாலுத்தீன் அவர்கள் இறந்ததையொட்டி, தற்போதையப் பொருளாளராக எம்.பி. அஹமது (அதிரை அஹமது) நியமனம் பெற்றார். அத்துடன், சங்கத்தின் அவ்வப்போதைய செயல்பாடுகளையும் முன்னேற்றத்தையும் உலகறியச் செய்யும் விதத்தில், வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்து வெளியிடும் பொறுப்பையும் அதிரை அஹமது அவர்கள் ஏற்று நடத்துவார்.
 
  • சங்கத்தின்  புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்ற 1-4-2010 முதல் 30-11-2010 வரையுள்ள வரவு-செலவுக் கணக்கு, சங்கச் செயலாளரால் வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
  • ECR நெடுஞ்சாலையில் இருக்கும் வயலை (சங்கத்திற்குச் சொந்தமானது) விற்பனை செய்வதற்கான முடிவெடுக்கப்பட்டு, தரகர்கள் மூலம் அதனை விற்பனை செய்ய ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 
  • சங்கத்தின்  சட்ட திட்டங்கள் (பைலா), சில திருத்தங்களும் மாற்றங்களும் இணைப்புகளும் செய்யப்பட வேண்டியிருப்பதால், அப்பொறுப்பை, வக்கீல் அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமும், மார்க்க ஆலோசனைக் குழுத் தலைவர் மவ்லானா முஹம்மது இப்ராஹீம் அவர்களிடமும் ஒப்படைத்து, அப்பணியைத் துரிதப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
    • சங்கத்தின் ஆதரவில் நடைபெறும் திருமணங்களின் பதிவேட்டில் இதுவரை இடம்பெறாமல் இருந்த சங்க நிர்வாகிகளின் சாட்சிக் கையொப்பங்கள் இணைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.  

    Sunday, February 6, 2011

    சங்கம் திறம்படச் செயல்பட...

    சங்கம்  திறம்படச் செயல்பட... 

          'முன்னேற்றப்  பாதையில் ஷம்சுல் இஸ்லாம்  சங்கம்' என்ற தலைப்பில்  நமது வலைத் தளத்தில்  ஓர் இடுகை இட்டு, அதற்குச்  சான்றாக, புதிதாக உருவாகிவரும்  சங்கக் கட்டுமானப் பணியின் நிழற்படங்களையும் இணைத்திருந்தோம்.

           
                           கடந்த காலத்தில் ஓரிருவரின் தன்னிச்சைப் போக்கால் சங்கத்துக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவது, தற்போதைய சங்க நிர்வாகிகளின் அன்றாடச் செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கும் நிலையில், சங்கம் நிதானமாக, முறையாக (slowly but steadily) இயங்கி வருகின்றது.

           
                         சங்கத்தின்  பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடப் பணி நடந்துவரும் இக்கால கட்டத்தில், தற்காலிகமாக அருகில் உள்ள செக்கடிப் பள்ளியில் சங்கத்தின் அன்றாட அமர்வுகள் நடந்துவருவதில் பல வசதிக் குறைவுகள் இருப்பதை நாம் உணர்கின்றோம்.  உதாரணமாக, ஒரு சாரார் தமது தரப்பு வாதத்தை எடுத்துரைக்கும்போது, சங்க நிர்வாகிகளைத் தவிர மற்றவர்களும் அங்கு வந்து அமர்ந்துகொள்வதால், அவர்கள் தமது தகவல்களைக் கூறத் தயங்குகின்றனர். 

          மேலும், சங்கத்தின் ஆவணங்களைப் பத்திரப்படுத்தி  வைப்பதும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றது.  பள்ளிவாசலில் பலரும் வந்து போகும் நிலையிருப்பதால், அவற்றைப் பாதுகாப்பது சிரமமாக இருக்கிறது.  பொது மக்கள் புதிய நிர்வாகத்தினரைச் சந்தித்துத் தம் கோரிக்கைகளை ஒப்படைப்பதற்காக, தலைவர் அல்லது செயலாளரின் வீடுகளுக்கு வரவேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர்.

          இந்நிலையில், சங்கக் கட்டடப் பணியோ, ஆமை வேகத்தில் நடந்து வருகின்றது!  காரணம்:  காசில்லை!  ஆகவே, சங்க நிர்வாகக் குழுவினர், தாமே முன்னின்று கோரிக்கை வைப்பதைப் போல், இங்கே அணி வகுத்து, உங்கள் முன் காட்சி தருகின்றனர்:


    தலைவர்      து. தலைவர்  செயலாளர்    து. செயலாளர் பொருளாளர் 
    Your browser may not support display of this image.
        

          பொறியாளர் ஹலீம்தீன் அவர்கள் அண்மையில்  சமர்ப்பித்த மதிப்பீட்டு  அறிக்கைப்படி, முழுமையாகக்  கட்டி முடிக்க 37 இலட்சம் ரூபாய் செலவாகும்.  இதுவரை, சங்கத்தின் பொருள் இருப்பிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் மட்டும் கட்டடப் பணியில் செலவிடப்பட்டுள்ளது.  மீதித் தொகையை நல்லுள்ளம் கொண்ட நம்மூர் சகோதரர்கள் மற்றும் கொடையாளர்களின் பொருளுதவி மூலம் செய்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

          ஊர்ப் பொது நலனில் அக்கறையுள்ள  அனைவரும் உங்கள் உங்கள் பங்களிப்பைப் பணமாகவோ பொருளாகவோ வழங்கி உதவுமாறு நிர்வாகத்தினர் அன்போடு கோரிக்கை வைக்கின்றனர்.  உங்கள் தாராளப் பங்களிப்புகள், பொது நலச் சங்கமான ஷம்சுல் இஸ்லாம் சங்கம் திறம்படச் செயல்பட உதவி புரியும்.


          சங்கத்தின்  வங்கிக் கணக்கு விவரம்:
           
                    Shamsul Islam Sangam
          Indian Bank, Adirampattinam Branch
          Current Account No. 921555264

    Saturday, January 1, 2011

    Adirai Chekkady Mosque Recent Photos 01/01/2011- Adirai Ahamed

    Adirai Chekkady Mosque
    ஷம்சுல் இஸ்லாம் சங்கம் கட்டுமான பகுதி

    Adirai Chekkady Mosque

    Adirai Chekkady Mosque
    Adirai Chekkady Mosque

    Sunday, December 19, 2010

    ஷம்சுல் இஸ்லாம் சங்க பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் மரணம்.

    மர்ஹூம் அஹமது தம்பி அவர்களின் மகனும், 'மாப்பிள்ளை' எஸ். ஏ. எம் ஷம்சுதீன் ,எஸ். ஏ. எம்  பாரூக் ஆகியோரது சகோதரரும், J.ஷேக் முஹம்மது அவர்களின் தகப்பனாரும், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் அவர்கள் நேற்றிரவு (18-12-2010) சனிக்கிழமை  வஃபாத் ஆகிவிட்டார்கள்.

    இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

    அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தகவல்:அதிரை அஹ்மது

    Monday, November 22, 2010

    கல்யாணமாம் கல்யாணம்!

                        "Marriages are made in Heaven" (திருமணங்கள் சொர்க்கத்தில் நடத்தப்படுகின்றன) என்றொரு பழமொழியுண்டு.  சொர்க்கத்தில் நடத்தப்படுகின்றனவோ என்னவோ, அவற்றுள் பெரும்பாலானவை சோகத்தில் முடிகின்றன – முறையாக நடத்தப்படாததால்!

                மோதல்கள், பிரச்சினைகள், வழக்குகள், சமரச முயற்சிகள், இன்னும் சொல்லப் போனால் கட்டப் பஞ்சாயத்துகள், - இப்படி, துயரத் தொடர்கதைகளாகப் பலரின் வாழ்க்கைகள் கேள்விக் குறியாகவே இருப்பதை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் பார்க்கிறோம்; கேட்கிறோம்.

                இது பற்றிய சிந்தனையில் இருந்தபோது, பல திருமண நிகழ்வுகள், அவை நடத்தி வைக்கப்படும் முறைகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன; சிந்திக்கவும் வைக்கின்றன.

                நாகூர்க்  கல்யாணம்: திடீரென்று கேள்விப்படுகிறோம், பையன் இன்னாருக்கும் இன்ன பெண்ணுக்கும் கல்யாணம் முடிந்துவிட்டதாம் என்று!  எப்படி?  எங்கே?  இந்தக் கேள்விகளுக்கு விடை: "நாகூர்க் கல்யாணம்!"  நாகூரில் இருக்கும் 'சாபுமார்கள்' ஒவ்வொருவரும் தன்னிடம் ஒரு கல்யாணப் புத்தகம் வைத்திருக்கிறாராம்.  அவ்வூருக்குப் புதிதாக அல்லது ஊர்க்காரரரின் பரிந்துரையோடு வருவோரைச் சூழ்ந்துகொண்டு, அவர்களின் 'நாட்டங்களை' நிறைவேற்றி வைக்கின்றார்களாம்!  அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட தொகை கை மாறியவுடன், 'அல்பாத்திஹா' சொல்லப்பட்டு, அங்கேயே திருமணச் சான்றிதழ் வழங்கப்படுகின்றதாம்! இதுபற்றி, இன்னும் கதை கதையாகத் தகவல்கள் நாள்தோறும் வருகின்றன. 

                மதுரை பாவா:  மதுரைப் பகுதியில் இப்படி ஒருவர் பிரபலமானவர்.  இவருக்குத் 'தொழிலே' திருமணம் செய்துவைப்பதுதான்.  அதற்காக லட்டர்பேடு, ரப்பர் ஸ்டாம்பு, பதிவுப் புத்தகம், சர்ட்டிபிகேட் சகிதம் ஓர் ஆணையாளர் போல் அமர்ந்து, தன்னை நாடி வரும் ஜோடிகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பாராம்.  சாட்சிகள்?  அதெல்லாம் பேசக் கூடாது!  இருந்தால் சரி; இல்லாவிட்டால், அவர்தான் எல்லாமும்!  இதைத் தட்டிக் கேட்க யாருக்கும் நேரமில்லை; நெஞ்சமில்லை!  அது பாட்டுக்கு அந்தந்த நேரத்தில் நடந்துவிடும்.  என்னிடம் இதுபற்றிக் கூறிய மதுரை நண்பரிடம், "நம் சமுதாய அமைப்புகள் இந்த அநியாயத்தை அடக்கக் கூடாதா?" என்று கேட்டபோது, அவர் கூறிய பதில்:

                "அவருக்குப்  பின்னால் ஒரு கூலிப்  படையே இருக்கு சார்!  அவர்களுக்கெல்லாம் தீனி  போட்டுத்தான் இவருடைய  'சாம்ராஜ்யம்' சரியாக நடந்து வருகிறது!"

                தான்தோன்றிக்  கல்யாணம்:  பெற்றோரும் குடும்பத்தவரும் சேர்ந்து செய்துவைத்தும், 'எப்படியோ' அந்தத் திருமணத்தின் மூலம் குழந்தை பெற்றும், திடீரென்று இன்னொருவனோடு ஓடிப்போய், எங்கோ 'காழி' ஒருவரைத் தேடித் பிடித்து, அவ்விருவரும் 'கல்யாணம்' செய்துகொள்ளும் 'தான்தோன்றிக் கல்யானங்களும்' நடக்கத்தான் செய்கின்றன!  உறவில்   சம்மந்தப்பட்டவர்கள் தேடித் பிடித்துவந்து கேட்டால், "தலாக் சொல்லிவிட்டோம்; மறு நிக்காஹ் செய்துகொண்டோம்" என்று எதிர்வாதம் பேசும் 'தான்தோன்றித் தம்பதிகளை'யும் பார்க்கத்தான் செய்கின்றோம்! சுருக்கமாகச் சொல்லப்போனால், இவர்கள், 'ஓடிப் போனவர்கள்'!  இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியில் என்ன தண்டனை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  ஆனால், உண்மையில் நடப்பதென்ன?  இங்கு 'ஆபத் பாந்தவர்களாக' வந்து சேர்கிறார்கள் 'கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள்' தம் வயிற்றையும் பாக்கெட்டையும் நிரப்புவதற்கு!  இதற்குப் பிறகும், அந்தத் திருமணத்தில் 'வலிமா' விருந்து நடக்கிறது; 'உரோஷமில்லா ஊரார்' பிரியாணி சமைத்துச் சாப்பிடும் கொடுமையும் நடக்கிறது!

                இப்படி  எல்லாம் முறையற்ற 'வாழ்க்கை ஒப்பந்தங்கள்' சமூகத்தில் நடப்பதாலோ என்னவோ, அரசாங்கமும்  தன் பிடியை இறுக்கிப் பிடித்து, 'கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம்' என்ற ஒன்றை நம் மீது தினித்துள்ளதோ என்னவோ!

                முறைகேடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான், பல ஊர்களில் பள்ளிவாயில்களை ஒட்டி, சங்கங்களும் சபைகளும் செயல்படுகின்றன.  அது போன்றுதான், நம்மூரிலும் சில ஜமாஅத்துகள் திருமணப் பதிவேடுகளை வைத்து முறையாகச் செயல்பட்டு வருகின்றன.  தகுதி வாய்ந்த நிர்வாகிகளால் நடத்தப்படும் சங்கங்கள் தரமான சேவைகளைச் செய்யக் காத்திருக்கின்றன.

                இந்த  அடிப்படையில் செயல்படத்  தொடங்கி, நமதூர் ஷம்சுல்  இஸ்லாம் சங்கம் பல பிரச்சினைகளைச் சுமுகமாகவும் அமைதியாகவும் தீர்த்து வைத்துள்ளது.  எனவே, சங்கத்தை வலுப்படுத்துவோம்! சமாதானத்தை நிலைநாட்டுவோம்!

    Saturday, November 13, 2010

    புதிய விண்ணப்பப் படிவங்கள்

    புதிய நிர்வாகம் என்றால், புதிய திட்டங்கள் வேண்டும் அல்லவா?
    அறிஞர்  பெருமக்களாலும் ஆர்வலர்களாலும் முறையாகத் தெரிவு செய்யப்பட எமது புதிய நிர்வாகம், சில விண்ணப்பப் படிவங்களைப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.  அவை வருமாறு:
     திருமணப்  பதிவு விண்ணப்பம்.

     இது, புதிதாகத் திருமண நிகழ்ச்சியை நடத்த விழையும் இரு வீட்டாரும் நிரப்பிக் கொடுக்க வேண்டிய விண்ணப்பப் படிவமாகும்.  
    இதில், குடும்பத் தலைவர், மணமகன், மணமகள், 'வலீ' ஆகியோரின் பெயர்களும், 'மஹர்' விவரமும், இரு வீட்டாரும் மனமொப்பிய நிலையில் வழங்கப்படும் அன்பளிப்புகள் (இருந்தால் அவையும்), திருமணத் தேதி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
    திருமணச் சான்றிதழ் விண்ணப்பம்.

    சங்கத்தின் மூலம் தமக்குத் திருமணம் நடைபெற்றதற்கான சான்று வேண்டுவோர்  விண்ணப்பிக்கும்  படிவம் இது.
     இதில், விண்ணப்பதாரர் பெயர், யாருக்குச் சான்று, சங்கத்தின்   அங்கத்தினர் எண், இணைப்பு ஆவணங்கள், சான்றுக் கட்டணம் (ரூ. முன்னூறு) ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.
    வழக்குப் பதிவுப் படிவம்: 

    திருமணம்  மற்றும் இதர  வழக்குகளுக்காகச் சங்கத்தின் மூலம்  தீர்வை விழைவோர் நிரப்பிக் கொடுக்கும் விண்ணப்பப் படிவம் இது. 
    இதில், விண்ணப்பதாரரின் பெயர், வழக்குக்கு உட்பட்டோர் விவரம், வழக்கின் சாராம்சம், அது தொடர்பான ஆவணங்கள், சங்கப் பதிவெண், சான்றுக் கட்டணம் (ரூ. இருநூற்றைம்பது) ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

    Thursday, November 11, 2010

    சங்கத்தின் அங்கத்தில்....!

    சகோதரர்களின்  பயன்பாட்டிறகாகக் கீழ்க்கண்ட பட்டியலைத் தருகின்றோம்: சங்கத்தின்  நிர்வாகப் பொறுப்பில் உள்ள முஹல்லாக்கள்:

    நடுத்தெரு (மேல்புறம் – கீழ்புறம்)

    வாய்க்கால்  தெரு (மேட்டுத்தெரு உள்பட)

    புதுமனைத் தெரு (செக்கடித் தெரு உள்பட)

    ஆலடித் தெரு (காயிதே மில்லத் நகர்)

    தட்டாரத்  தெரு / செட்டித்தெரு / தச்சத் தெரு

    ஆஸ்பத்திரி (ஷாதுலியா) தெரு

    புதுத்தெரு (வடபுறம்)

    கிட்டங்கித் தெரு / மக்தூம் பள்ளித் தெரு /   வண்டிப் பேட்டை

    பழஞ்செட்டித்  தெரு / ஏ. ஜே. நகர்

    பிள்ளைமார்  தெரு / சால்ட் லைன்

    சுரைக்கா கொல்லை / சங்கத்துக் கொல்லை

    சி. எம். பி. லைன் (அம்பேத்கர் நகர்) / இஜாபா பள்ளித் தெரு

    எஸ். ஏ. எம். நகர்

    பிலால் நகர்

    ( இனி வரும்  காலத்தில், மேற்கண்ட பகுதிகளை  ஒட்டி உருவாகும் குடியிருப்புப்  பகுதிகளும் இப்பட்டியலில்  சேர்த்துக்கொள்ளப்படும், இன்ஷா அல்லாஹ்.)

    சங்க  இணைப்பில் உள்ள பள்ளிவாசல்கள்:

    செக்கடிப் பள்ளி

    முஹைதீன்  ஜுமுஆப் பள்ளி

    மரைக்கா பள்ளி

    தக்வாப் பள்ளி

    சித்தீக்  பள்ளி

    ஹனீப் பள்ளி

    மர்யம் பள்ளி

    இஜாபா பள்ளி

    பிலால் பள்ளி

    ரஹ்மானியா பள்ளி

    புதுப்பள்ளி

    மக்தூம் பள்ளி

    ஏ. ஜே. பள்ளி

    வண்டிப்பேட்டைப் பள்ளி

    உமர் பள்ளி

    ( இனி வரும் காலத்தில் இப்பகுதிகளை ஒட்டிக் கட்டப்பெறும் பள்ளிவாயில்களும் இப்பட்டியலில் இடம்பெறும், இன்ஷா அலாஹ்.)

    Wednesday, November 10, 2010

    முன்னேற்றப் பாதையில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்

    முன்னேற்றப் பாதையில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்


    அஸ்ஸலாமு-அலைக்கும்.  அல்ஹம்துலில்லாஹ்!  முறையான புத்தாக்கம் (Revamp) செய்யப்பெற்ற பின்னர், நாள் தோறும் அசர் தொழுகைக்குப்பின் செக்கடிப் பள்ளியில் கூடி, ஓர் அலுவலகம் போல் செயல்பட்டு வரும் புதிய நிர்வாகத்தின் முனைப்பான முயற்சியால், அதிரைச் சமூகப் பிரச்சினைகளும் மார்க்கப் பிரச்சினைகளும் முறையாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன. 

    இதனைத்தான்  சங்கத்தின் மூலம் அதிரைச்  சகோதரர்கள் எதிர்பார்த்தனர்.  இந்த வகையில், நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கம் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்டு வருவதை நாம் கண்டு வருகின்றோம். 'சங்கமா? பங்கமா?' என்றெல்லாம் கடந்த காலத்தில் சகோதரர்கள் எதிர்க் கணை தொடுக்கும் அளவுக்கு, மோசமான நிலை ஏற்பட்டிருந்தது உண்மைதான்.  உள்ளூர் ஆலிம்களின் வழிகாட்டலில், பொருத்தமான நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்து, இப்போது திறம்பட நடந்து வருகின்றது நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்.

    1920 முதல் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுவரும் அரசுப் பதிவு பெற்ற ( TNSR No. 35/2004 ) நமது சங்கம், பல வெற்றிச் சாதனைகளைப் புரிய ஆயத்தமாயுள்ளது.  இந்த நோக்கத்தில், முதலாவதாகச் சங்கத்திற்கு என்று புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.  துவக்க நிலையில் உள்ள இதன் நிழற்படங்களைத்தான் நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

    அன்பர்களே!  புதிய நிர்வாகம் திறம்படச்  செயல்படுவதற்கு, உங்கள் அனைவரின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும்  தேவை.  சமுதாயப் பணியில் எங்களுடன் கை கோர்த்து வாருங்கள்!  அல்லாஹ் துணை நிற்பான்.  வஸ்ஸலாம்.


    Tuesday, November 9, 2010

    புரிந்துணர்வுக்கு நன்றி!

           ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வலைத்  தளத்தை உருவாக்கும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கும்போது, திடீரென்று சங்கப் பெயரிலேயே ஒரு வலைத்  தளம் யாராலோ உருவாக்கப்பட்டுச்  சில நாட்கள் வலம் வந்ததை நாம் அறிந்து வியந்தோம்.   சங்கத்தால் அனுமதி அளிக்கப்படாத அந்தத் தளத்தை நாம் விரும்பவில்லை.  என்றாலும், அதில் முனைந்த அன்பர்களை முறையாகத் தொடர்பு கொண்டு, அதை நிறுத்தும்படிக் கோரினோம்.  அவர்கள் சில நாட்கள் தயக்கத்தின் பின், அதற்குச் சம்மதித்தார்கள்.

          முறையான மூடுவிழாவுக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட சுணக்கத்தை நாமும் பொருத்துக்கொண்டோம்.  அல்ஹம்து லில்லாஹ்!  கருத்து மோதல், ஒற்றுமையின்மை, வதந்தி பரப்புதல் இவையனைத்தும் கூடாது என்பதால்தான், அந்தச் சகோதரர்களை நாம் கட்டாயப் படுத்தினோம்.  அல்லாமல், அவர்களைத் தரம் தாழ்த்துவதோ, அவர்களிடம் குறை காண்பதோ எமது நோக்கமன்று.

          அந்த  முயற்சியில் ஈடுபட்டவர்கள்  மட்டுமன்றி, மற்றவர்களும் சங்கம் பற்றித் தங்கள் கருத்துகளை இப்பதிவில் வைக்கலாம்.  மாற்றுக் கருத்துகளாக இருப்பினும், அவை constructive criticisms ஆக இருந்தால், நிச்சயமாக நாம் அவற்றைப் பரிசீலிப்போம் என்பதை இதன் மூலம்  தெரிவித்துக்கொள்கிறோம்.     

          சங்கத்துக்கு  வந்த சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன.  அவற்றை ஒவ்வொன்றாகத் தூசி தட்டி எடுத்துத் தீர்வு காண வேண்டியதிருக்கிறது.  இதற்கிடையில், புதிய பிரச்சினைகளும் வந்துகொண்டிருக்கின்றன.  எனவே, அவசரம் அவசியம் கருதித்தான் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.  அது மட்டுமன்றி, ஷரீஅத்தின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை நமதூர் ஆலிம்களிடம் ஒப்படைத்து, குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் அவர்கள் தீர்ப்பளிப்பார்கள்.  அதனாலும் சுணக்கம் ஏற்படலாம்.

          இவை போன்ற காரணங்களைப் புரிந்துணர்வோடு ஏற்று, நமதூர்ச் சகோதரர்கள் தங்கள் ஒத்துழைப்பைத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

    Monday, November 8, 2010

    போலி திருமணச் சான்றிதழ் : சங்கச் செயலாளரின் கண்டன அறிக்கை!

    ஷம்சுல் இஸ்லாம் சங்கச்  செயலாளரின் கண்டன  அறிக்கை26/10/2010.திங்கட்கிழமை

    குவைத்வாழ்  அதிரைச் சகோதரர்கள் சில நாட்களுக்கு முன் எமது பார்வைக்குச் சில ஆவனங்களை மின்மடல் மூலம் அனுப்பித் தந்திருந்தார்கள்.  அவற்றை நிதானமாகப் பரிசோதனை செய்த பின்னர், எமது சங்கத்திலிருந்து கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் திருமணச் சான்றிதழ் பொய்யானதும் போலியானதுமாகும் என்பது நிரூபணமாயிற்று.  அந்தப் போலிச் சான்றிதழின் அடிப்படையிலேயே 'நோட்டரி பப்லிக்' அத்தாட்சியும், தமிழ்நாடு அரசுக் காஜியின் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது!

    இந்த மோசடியான, போலிச் சான்றிதழ் வேலையில் ஈடுபட்ட, எங்கள் ஊரைச் சாராத அந்த மணமக்கள் மீது நாங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எங்கள் வக்கீலிடம் புகார் செய்துள்ளோம்.  அவர் இதற்கான பூர்வாங்கப் பணிகளில் முனைந்துள்ளார்.  அவ்வாறு சம்மந்தப்பட்டவர்கள் மீது எதிர் நடவடிக்கை எடுத்து, அதனால் அந்தத் தம்பதியர் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நாங்கள் பொறுப்பாளர்களாக மாட்டோம்.

    இம்முயற்சி, இது போன்ற வரம்பு மீறல்களில் ஈடுபட முனையும் மற்றவர்களையும் தடுத்து நிறுத்தும் என்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

    இப்படிக்கு,
    M.S.M. அபுல் ஹசன்   (செல்: 00 91 9786421535)
    பொதுச் செயலாளர்
    ஷம்சுல் இஸ்லாம்  சங்கம்
    அதிராம்பட்டினம்.

    Sunday, November 7, 2010

    ஷம்சுல் இஸ்லாம் சங்க அதிகாரப்பூர்வ இணைய தள துவக்கம்!

    அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்!
    நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம். சங்கத்தின் நிகழ்வுகள்,திட்டங்கள்,தீர்மானங்கள்,அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் வெளியிடப்படும்.

    சங்க நிர்வாகம் ஒளிவு மறைவற்ற முறையில் செயல்பட வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளது.அதன் நடவடிக்கைகளில் ஒன்றே இணைய தளம்.சங்க கூட்டத்தில் கலந்துக்கொண்ட முஹல்லாவாசிக்கு என்ன தகவல் கிடைத்ததோ அதே தகவல் உலகில் எந்த நிலத்தில் இருந்தாலும் மற்றோரு முஹல்லாவாசிக்குக் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறது.

    எனவே, உலகம் முழுவதும் வாழும் முஹல்லாவாசிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

    இறைக் கட்டளை

    இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)