Ads 468x150px

Labels

Monday, September 3, 2012

அவதூறு,பரபரப்பு‍:சங்கத்தின் விளக்கம்!

அஸ்ஸலாமுஅலைக்கும்.

நமதூர் அதிராம்பட்டினம், மார்க்க ரீதியிலும் இந்தியச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் வாழும் மக்களைக் கொண்ட  ஊராக இருந்து வருகிறது. நமதூரில் நடக்கும் நிகழ்வுகளில் தேவையானபோது தலையிட்டு, மார்க்க ரீதியிலும்  நம் நாட்டுச் சட்ட ரீதியிலும் தீர்வுகளை வழங்க நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்சுல் இஸ்லாம்  சங்கம் கடந்த 92 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
உள்ளூர் முஸ்லிம் குடும்பங்களிடையே ஏற்படும்  சிவில் விவகாரங்களில், குறிப்பாக திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றில் மார்க்க அறிஞர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்றுத் தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நமதூருக்கு மார்க்கச் சொற்பொழிவுக்காக சித்தார்கோட்டையிலிருந்து  அழைத்துவரப்பட்ட கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் நமது உள்ளூர் நடவடிக்கைகளுக்கு  ஊறு விளைக்கும்படியாக இயக்க சார்பு இளைஞர்களைத் தூண்டிவிட்டதால் எழுந்துள்ள அமைதியின்மைக்குத்  தீர்வு காண வேண்டியும், அவர் வசிக்கும் பகுதி சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவின் எல்லைக்குள் இருக்கும்  காரணத்தாலும், கடந்த தேதி: 28 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கதிற்கு நேரில் வந்து விளக்கம் தரும்படிக் கோரப்பட்டது.

ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் தக்வா பள்ளி செயலாளருக்கும் இடையே வழக்கு நடந்து வருவதாலும், பொதுவில் பேசுவது வழக்கைப் பாதிக்கும் என்பதாலும், தன்னால் கலந்து கொள்ள முடியாதென்றும்  தெரிவித்த நிலையில், 29அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு சம்சுல் இஸ்லாம் சங்க  நிர்வாகிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களது வீட்டிலேயே சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடு தேடி வந்தவர்களை முகமன்கூறிச் சந்திக்கும் இஸ்லாமியப் பண்பாடின்றி, சுமார் 10-20  நிமிடங்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்க வைத்துவிட்டு, "சித்தீக் பள்ளியில் போய் இருங்கள், பேசலாம்" என்று  தெரிவித்தார்.

அவ்வாறே, சங்க நிர்வாகிகளும் சித்தீக் பள்ளிக்குச் சென்றபோது, இயக்க சார்பு இளைஞர்களையும் உடன் வைத்துக்கொண்டு "இப்போது பேசலாம்" என்று சொன்னார். அதற்கு சங்க நிர்வாகிகள், “இயக்க சார்பு இளைஞர்களை வரவழைத்துக்கொண்டு  சங்க நிர்வாகிகளுடன் பேச விரும்புவது சரியல்ல. வெளியூரிலிருந்து எத்தனையோ ஆலிம்கள்  கற்கவும்,  கற்றுகொடுக்கவும் வந்துள்ளனர். ஆனால், உங்களைப் போன்று இயக்க சார்பு இளைஞர்களுடன் இணைந்து  முஹல்லா சங்கத்தையும் அதன் நிர்வாகிகளான உள்ளூர் பிரமுகர்களையும் அவமதித்ததில்லை” என்று  சொல்லி, அவருடன் பேசாமல் திரும்பி விட்டனர்.


அதிரையில் பல்வேறு அரசியல் கட்சி சார்பு இயக்கங்களும்,சமுதாய இயக்கங்களும் இயங்கி வந்தாலும், உள்ளூர்  அமைதிக்கு ஊறு விளைக்கும் அசாதாரண நடவடிக்கைகளின்போதும் சட்ட ரீதியான வழிமுறைகளில் தலையிட்டுத்  தீர்வு காணும் அதிரை முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற முஹல்லா சங்கங்களில் சம்சுல் இஸ்லாம்  சங்கமும் ஒன்று. அவ்வகையில், ஜனாப் ஹைதர் அலி ஆலிம் மற்றும் தக்வா பள்ளி கமிட்டியிடையே ஏற்பட்டுள்ள  வழக்கு காரணமாக சம்சுல் இஸ்லாம் முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைதியின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இப்பகுதிக்குட்பட்ட ஆயிஷா மகளிர் மன்றத்தில் நடந்துவந்த  ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

உள்ளூர் நடவடிக்கைகளில் பொறுப்புள்ள முஹல்லா சங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட நடவடிக்கையே இது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் போன்ற தகுதியுடைய உள்ளூர் மார்க்க அறிஞர்களை ஆலோசகர்களாகக் கொண்டுள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி நபர்கள்  தலையிடுவது, முஹல்லாவாசிகளை அவமதிக்கும் செயலாகும். முஹல்லாவுடைய கட்டுப்பாடு மற்றும்  அமைதிக்கு ஊறு விளைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் சம்சுல் இஸ்லாம் சங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தேவையெனில், மார்க்கம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்  என்பதையும் முஹல்லாவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
***********

கீழ்கண்ட விளக்கங்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கும், விளக்கம் வேண்டுபவர்களுக்கும் போதுமானதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்:

1)
ஹைதர் அலி ஆலிம் சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில் தலையிட்டதற்காகவா அவர்மீது நடவடிக்கை?

இல்லை. மேலுள்ள விளக்கத்தில் 2,3 & 4 ஆம் பத்திகளில் சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும், முஹல்லா  சங்க நிர்வாகிகளை அவமதித்து, உள்ளூர் இளைஞர்களைத் தூண்டியதற்காகவுமே ஆயிஷா மகளிர் மன்றத்தில்  அவரது பயான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்கொண்டு தவறான பிரச்சாரங்களைப் பரப்பாமலிருக்க பெரிய  ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

2)
ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு வெளியேறும்படி சங்கம் நிர்ப்பந்தித்ததா?

இல்லை. பிரச்சினை பெரிதாகாமலிருக்க பொதுவில்  பயான் செய்வதற்கு மட்டுமே தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இது பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும், பிரச்சினை  மேலும் வலுக்காமல் இருக்கவும் எடுக்கப்பட்ட சங்கத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட நடவடிக்கையே அன்றி, தனி நபர்  மீதான வெளியேற்றும் நடவடிக்கை அல்ல.

3)
சம்சுல் இஸ்லாம் சங்கம் ஹைதர் அலி ஆலிமை அவமதித்ததா?

இல்லை. மேலே 2 & 3 ஆம் பத்திகளில் சொன்னபடி, அவரது விளக்கம் பெறும் நோக்கத்தில் கண்ணியமாக அழைக்கப்பட்டதை அவர்  ஒவ்வாத காரணங்களைச் சொல்லி மறுத்ததால், பொதுவில் அவருக்கு சங்கடம் ஏற்படாமலிருக்க, அவரது இல்லத்திற்குச்  சென்ற உள்ளூர் முக்கியஸ்தர்களான சங்க நிர்வாகிகளைச் சந்திக்காமல் அவர்தான் அவமதித்தார்.மேலும்,  ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களை அதிரைக்கு அழைத்து வந்து, அதன் முஹல்லாவுக்குட்பட்ட சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி  மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிகளில் பொறுப்பான பதவிகளைக் கொடுத்து கண்ணியப்படுத்தியதும் சம்சுல் இஸ்லாம்  சங்கத்திற்கு உட்பட்டவர்களே.

4)
மார்க்க அறிஞரின் பயானைத் தடுப்பது சரியா?

சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மஷ்வரா அடிப்படையில் எடுக்கப்படும் அவசர நடவடிக்கையின்படி இது சரியே.

5)
ஹைதர் அலி ஆலிமின் பயான்களால் நமதூர் மக்களிடம் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே?

ஓரளவு உண்மையே. எனினும், அல்லாஹ் - ரசூல் (ஸல்) அவர்களின் போதனைகளை எடுத்துச் சொல்லும் பல அறிஞர்களும் பேச்சாளர்களும் அதிரையில் உளர். அவர்களை முறையாகப் பயன்படுத்தி இருந்தாலும் அத்தகைய  விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்ஷா அல்லாஹ் சம்சுல் இஸ்லாம்  சங்கம் இவ்விசயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
6) சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்திற்காக ஹைதர் அலி ஆலிமை பலி கடாவாக்குவது நியாயமா?
ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் எத்தகைய விரோதமும் இல்லை. சித்திக் பள்ளி சொத்து விவகாரத்தை சம்சுல் இஸ்லாம் சங்கத்திடம் ஒப்படைத்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி, உலமாக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோம்.
7) ஹைதர் அலி ஆலிம் அவர்கள்மீது வழக்குத் தொடுத்தவர் மீது சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இரு தரப்பிற்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையிலிருக்கும்போது முஹல்லா சங்கம் சமாதான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட முடியும். அவ்வகையில்தான் இரு தரப்பையும் சுமூகமாகப் பேச வைத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முதலில் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்டதும், வர மறுத்தபோது நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதும் நடந்தது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் நிர்வாகிகளை அவமதிக்காமல் ஒத்துழைத்திருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி நியாயமான தீர்வு எடுக்கப்பட்டிருக்கும்.
மேலும், சம்பத்தப்பட்ட நபரிடமும் பேசியுள்ளோம், கேசைத் திரும்பப் பெறும்படி யும் கூறியுள்ளோம், ஆனால் இது இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் எவராக இருந்தாலும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
      ******************
அன்பிற்குரியவர்களே! நமதூர் அதிராம்பட்டினம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பிழைப்பு தேடிவந்த பலரை  ஆதரித்தும், கண்ணியப்படுத்தியுமே வந்துள்ளது. கண்ணியத்துக்குரிய ஆலிம்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும்  வணிகர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஆதரித்து வருகிறோம். எனினும், அவர்கள் எல்லோரும்  முஹல்லா ஜமாத்துகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சில வருடங்களாக நமதூர் உலமாக்களின் எத்தகைய ஆலோசனையையும்  ஏற்காமல், தன்னிச்சையாகச் செயல்படுவதோடு, சித்தீக் பள்ளியின் சொத்து விவகாரத்தில் இன்னொரு முஹல்லா  இளைஞர்களை அழைத்துவந்து அமைதியின்மையை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். அப்பகுதியில் சம்சுல்  இஸ்லாம் சங்கம் செயல்பட்டுவரும் நிலையில் உள்ளூர் நடவடிக்கையில் ஹைதர் அலி ஆலிம் செயல்பட்டது  வரம்புமீறிய நடவடிக்கை என்பதோடு முஹல்லாவாசிகளின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத தன்னிச்சையான  போக்கு என்பதையும் கவனத்தில் கொண்டு, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் நன்மை நாடிய நடவடிக்கைகளுக்கு  ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ வழங்குவதே நன்மை பயக்கும்.

அவ்வகையில், பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறோம் என்ற ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் இணையதளங்களில்  சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவுகளும் தனிநபர் தளங்களும்  சட்ட நடவடிக்கைக்குட்பட்டது என்பதை உணர்ந்து பொறுப்பாகச் செயல்படும்படி வேண்டுகிறோம். இவ்விசயம் தொடர்பாக மேலதிக விளக்கம் வேண்டுவோர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு,
சம்சுல் இஸ்லாம் சங்கம்
நிர்வாகம் – அதிரை

Wednesday, December 28, 2011

சங்கம் என்ன செய்யும்?


சங்கம்  என்ன செய்யும்? 
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு வரும் வழக்குகளுள்  நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம்  கணவன்-மனைவி  சம்மந்தமான வழக்குகளாகவே வருகின்றன.  அவற்றுள்ளும் பல, ‘தலாக்’ அல்லது ‘ஃபசஹ்’ கேட்டுக் கணவனோ மனைவியோ தொடுக்கும் வழக்குகளாகவே இருக்கின்றன.  பெண் வீட்டாரின் தகுதிக்கு மேலான சீதனம் கேட்டு வரும் வழக்குகளும் இதில் அடங்கும்.  மாமியார், மாமனார், நாத்தனார், மற்றுமுள்ள உறவினர்கள் செய்யும் கொடுமைகளுக்கும் அளவில்லாத வகையில் வழக்குகள் வருகின்றன. 
இவற்றை இயலுமான வரையில் ஒற்றுமைப் படுத்துவதற்கே சங்க நிர்வாகம் பாடுபடுகின்றது.  அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாதபோது, ‘தலாக்’ அல்லது ‘ஃபசஹ்’ முறைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. 
அண்மையில் சங்கத்தின் முன் வந்த வழக்கு, சரியான மார்க்கத் தீர்ப்பின் அவசியத்தைத்  திரும்பிப் பார்க்க  வைத்துள்ளது.  நமதூரைச் சேர்ந்த, ஏற்கனவே ‘தலாக்’ பெற்ற விதவைப் பெண் ஒருவருக்குத் தஞ்சாவூரைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகித் ‘தலாக்’ பெற்ற மாப்பிள்ளையை ஆறு மாதங்களுக்கு முன் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் திருமணம் நடந்தது.  இப்போது, மாப்பிள்ளை, மாமனார் கொடுமை என்ற காரணத்தால், அப்பெண்ணும் அவரைச் சேர்ந்தவர்களும் சங்கத்துக்கு வராமல்,கம்யூனிஸ்ட் மாதர் அமைப்பைச் சேர்ந்த ஒருத்தியின் மூலம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மாப்பிள்ளை வீட்டாரிடம் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி, பத்து லட்சம் ரூபாய் தந்தால்தான் கேசை வாபஸ் வாங்குவோம்; இல்லாவிட்டால், வரதட்சணைக் கொடுமை என்ற காரணம் காட்டி ‘உள்ளே’ தள்ளிவிடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள். 
கட்டப்  பஞ்சாயத்து செய்து மிரட்டி மாப்பிள்ளையிடம் பணம் பிடுங்க நினைத்த கம்யூனிஸ்ட் மகளிர் அணித் தலைவி, மாப்பிள்ளை சார்பாக இருந்து செயல் பட்ட நமதூர்க்காரர் ஒருவருடன் போனில் தொடர்பு கொண்டு, இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் கீழ்த் தரமாகப் பேசியுள்ளார்.  இவ்வளவும் நடந்ததால், மாப்பிள்ளை வீட்டார் தாம் பணிந்து போவதில்லை என்று உறுதியாக நின்றுள்ளனர்.   
அதனை  அடுத்து, யாரென்று காட்டிக்கொள்ளாத  ஒருவர் மாப்பிள்ளை வீட்டாரைத் தொடர்பு  கொண்டு, ‘ஐந்து  லட்சத்துக்கு சம்மதித்தால் கேசை வாபஸ் வாங்கிவிடலாம்’ என்று பேரம்  பேசியுள்ளனர்.  அதற்கும் மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை.

இந்த  நிலையில்தான், தஞ்சாவூர் மாப்பிள்ளை வீட்டார் சங்கத்துக்கு மனு எழுதிக்கொண்டு வந்தார்கள்.  மனுவைப் பரிசீலித்தபோது, அதுவரை பெண் வீட்டார் சங்கத்துக்குத் தமது சார்பிலான எந்த விண்ணப்பமும் கொண்டுவராமல் இருப்பதால், மாப்பிள்ளை வீட்டாரைத் தாமதிக்கக் கேட்டுக்கொண்டோம். 
இதற்கிடையில், காவல் நிலையத்தில் வைத்து, மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒரு லட்சம் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று பேசி ஒப்பந்தம் எழுதி முடித்துப் பணமும் கை மாறிவிட்டதாம்.  மாப்பிள்ளை வீட்டார் ‘தலாக்’ சொல்வதில் முடிவாக நின்றதால், அதனை நேரில் உறுதிப் படுத்துவதற்காக, அவர்களை சங்கத்தின் ஆலிம் அழைத்திருந்தார்.  மாப்பிள்ளை ‘முத்தலாக்’ என்று கூறியதால், ‘ஷரீஅத்’படித் ‘தலாக்’ உண்டாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.  
இதன்  பிறகு பெண்ணும் பெண்ணைச் சேர்ந்தவர்களும்  அந்த மாப்பிள்ளையுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்தனர்!  அதற்குக் காலம் கடந்துவிட்டது.  அது மட்டுமல்லாமல், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் யாருக்கும் தெரியாமல், பெண்கள் தன்னிச்சையாக எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்!  பெண் வீட்டுத் தரப்பில் பல முரண்பாடுகள் நடந்துள்ளதால், இந்தப் பெண்ணும் மாப்பிள்ளையும் இனிச் சேர்ந்து வாழ சாத்தியமே இல்லை என்று சங்கம் முடிவு செய்தது. 
தீர்ப்பளிக்க  சங்கம் என்ற ஒன்று  இருக்கும்போது, வேறு பிற அடாவடித் தனத்தில் இறங்க  நினைப்பவர்களுக்கு  இது ஒரு பாடமாகும்.  ‘சங்கம் என்ன செய்யும்?’ என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுவிடுபவர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது

Monday, September 26, 2011

சங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்


நேற்று மாலை, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அழைப்பை ஏற்று, அதிரையில் இயங்கும் கீழ்க்காணும் சங்கங்கள் மஃரிப் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளியில் ஒன்று கூடின. 

* தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு
* கீழத்தெரு சங்கம்
* தரகர் தெரு சங்கம்
* நெசவுத் தெரு சங்கம்
* கடல்கரைத் தெரு சங்கம்
* மிஸ்கீன் பள்ளி சங்கம் 

தொடக்கமாக, கூட்டத்தின் நோக்கம் பற்றிய பேரா. அப்துல் காதர் அவர்களின் சிற்றுரைக்குப் பின், அப்துல் லத்தீஃப் ஆலிம் சாஹிப் அவர்கள், நமக்கிடையே வரவேண்டிய ஒற்றுமை பற்றி அழகிய சிற்றுரையொன்றை நிகழ்த்தினார்கள்.

அதில் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற பொருளை எடுத்து விரிவாகப் பேசினார்கள்.  நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பட்ட படை ஒன்றுக்குப் பதினெட்டு வயது வாலிபராக இருந்த உசாமா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக்கி, அதில் உமர் (ரலி) போன்ற பெரும் பெரும் நபித் தோழர்களைப் படையணிப் போராளிகளாக்கி அனுப்பியது பற்றிக் குறிப்பிட்டு, தலைமைக்குக் கட்டுப்பட்டு எவ்வாறு அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள்.

இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பின் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடந்தது. அதன் பின் மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. வந்திருந்த சங்கப் பிரதிநிதிகள் தத்தம் கருத்துகளை எடுத்து வைத்தனர்.

பேரூராட்சித் தலைவர் தேர்தலுக்குக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்க முடியாது என்ற கருத்தை கீழத் தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.

ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாக்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் போட்டியில் இருப்பதால், முதலில் அவர்களைத்தான் சரி பண்ண வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.

கட்சிப் போட்டியாளர்களையும் கூட்ட முடியும் என்ற கருத்தை தரகர் தெருப் பிரதிநிதி எடுத்து வைத்து, இது உள்ளாட்சித் தேர்தல்தான் என்பதை வலுவாகப் பதிவு செய்தார்.

தலைவர் தேர்தல் கட்சி அடிப்படையில்தான் நடக்கும்; அதை நம்மால் தடுக்க முடியாது என்ற கருத்தைக் கடல்கரைத் தெருப் பிரதிநிதி உறுதியாக எடுத்து வைத்தார்.

போட்டியாளர்களைக் குறைக்க, நமது சங்கங்கள் அவர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் தனது வேண்டுகோளாக எடுத்து வைத்தார்.

முடிவாக, "அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்" என்ற பெயரில் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு, அனைவராலும் அது ஒருமனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில், இன்று காலை பத்து மணிக்கு, மரைக்கா பள்ளிக்கு வருமாறு தலைவர் வேட்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களுக்கு, நமக்கிடையே நிலவும் அதிகமான போட்டியைக் குறைக்கும் விதத்தில் அறிவுரை கூறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்: அதிரை அஹ்மது

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அறிவிப்பு


அதிரை நகரின் சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டுப்பாட்டு முஹல்லாக்களைச் சேர்ந்த ஆறு வாக்களிப்புப் பகுதி (வார்டு)களின் வேட்பாளர்களை ஒருமனதாகத் தேர்வு செய்யும் ஒற்றுமை முயற்சிக்காக இன்று (25-09-2011) காலை பத்து மணி முதல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பயனாக    வெற்றி கிட்டியுள்ளது.  அல்ஹம்து லில்லாஹ்!  அதிரைத் தேர்வு நிலைப் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்கத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
1வது வார்டு   - ஷேக் அஷ்ரப்
12வது வார்டு  - எம்.ஏ. முஹம்மது ஹனீஃபா
13வது வார்டு  - எம்.ஜே. சம்சுதீன்
14வது வார்டு - எம்.ஏ. ஷேக் அப்துல்லாஹ்
19வது வார்டு  - எஸ். சவ்தா
21வது வார்டு  - எஸ். முஹம்மது இப்ராஹீம்
      நமது சங்கத்தின் நேரிய ஒற்றுமைக்கான வழிகாட்டலுக்கு, புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்கள் அனைவருக்கும் சங்கம் தன் ஆழிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
சம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம் 

Saturday, September 17, 2011

அதிரை பேரூராட்சி தேர்தல் 2011 : வார்டு உறுப்பினர்கள் சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு!


சென்ற 9.09.2011 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் பஞ்சாயத்துத் தேர்தல் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விருப்பமனுக்களை 17.9.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் ஓப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் , தேர்தல் விண்ணப்பப் பெற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்து 20.9.2011தேதிக்குள் மீண்டும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் விண்ணப்பங்களை ஒட்டிய கடித உறையில் வைத்துக்கொடுத்துவிட்டால் அந்த விண்ணப்பங்கள் அவர் சார்ந்துள்ள முஹல்லா பள்ளியில் ஒப்படைக்கப்படும் .

பின்னர் முஹல்லா பள்ளி கமிட்டியில் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய சிலரை தேர்வு செய்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அனுப்பிவைப்பார்கள். இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஊர்மக்கள் அனனவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



இப்படிக்கு
தலைவர்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம்


இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)